ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு அரசியல் கைதிகள் தென்கயிலை ஆதீனம் ஊடாகக் கோரிக்கை

ஒக்டோபர் 12, 2017

தமது விடுதலைக்கு அனைத்து தரப்பினரும் இணைந்து குரல்கொடுக்க வேண்டும் எனவும் நாளை  (12.10.2017) நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறும் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் உணர்வுபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தென்கயிலை ஆதீனம் மற்றும் அகில இலங்கை சைவ மகா சபை ஊடாக அவர்கள் இந்த அவசர கோரிக்கையை முன்வைத்துள்ளனர். 

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை தென்கயிலை ஆதீன முதல்வரும் அகில இலங்கை சைவ மகா சபையின் தலைவருமான தவத்திரு அகத்தியர் அடிகளார் தலைமையிலான சைவ மகா சபையின் குழுவினர் இன்று வியாழக்கிழமை மதியம்  12.10.2017 நேரில் சென்று சந்தித்தனர். 

கைதிகள் உடல் சோர்வுற்று, பேசக்கூட சக்தியற்ற நிலையில் இருக்கின்றனர் எனவும் அவர்களுக்காக குரல் கொடுப்பது அனைவரதும் கடமை என்றும் மேற்படிக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக தென்கயிலை ஆதீன முதல்வரும் அகில இலங்கை சைவ மகா சபையின் தலைவருமான தவத்திரு அகத்தியர் அடிகளார் கருத்து தெரிவிக்கையில், 

தமது வழக்குகளை வவுனியா நீதிமன்றில் இருந்து அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றவேண்டாம் எனக் கோரி உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

தமது வழக்குகளை இடமாற்றினால் தாங்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வர் என்பதாலேயே மாற்றவேண்டாம் தாம் கோரி வருகின்றனர் என அவர்கள் தெரிவித்தனர். 

தமக்காக நாளை நடைபெறவுள்ள ஹர்த்தாலை அனைத்துத் தரப்பினரும் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அவர்களுக்காகக் குரல்கொடுக்க வேண்டியது எம் அனைவரதும் கடமையாகும். எனவே, நாளை நடைபெறவுள்ள ஹர்த்தாலை எந்தவித வேறுபாடுகளும் இன்றி அனைத்துத் தரப்பினரும் இணைந்து முன்னெடுக்குமாறு கோருகின்றோம். – என்றார்.

மேலும், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, அவர்கள் விரைவில் விடுவிக்கப்படவேண்டும் என நாம் இறை சிவனைப் பிரார்த்திக்கின்றோம். – எனவும் அவர் கூறினார். 

இன்று சிறைச்சாலைக்குச் சென்ற சைவ மகா சபையின் குழுவில் இடம்பெற்ற சமூக செயற்பாட்டாளர்  முருகையா கோமகன் கருத்துத் தெரிவிக்கையில், 

சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த கைதிகள் தற்போது சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர். அவர்கள் உடல்நிலை சோர்வடைந்த நிலையில் உள்ளனர். 

அவர்களுக்கு 15 தொடக்கம் 16 வரையான சேலைன்கள் ஏற்றப்பட்டுள்ளன. ஒவ்வொருவரின் உடல் நிறையும் 12 தொடக்கம் 15 கிலோ வரை குறைந்துள்ளது. இந்த நிலை நீடிக்குமாயின் அது அவர்களுக்கு ஆபத்தாக அமையும். எனவே, விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். - என்றார். 

மேற்படிக் குழுவில் தென்கயிலை ஆதீன முதல்வரின் சீடர் சிவத்திரு திருமூல தம்பிரான், மற்றும் சிவ தொண்டர்களும் இணைந்திருந்தனர். 

 

 

செய்திகள்