ஹிலாரி கிளிண்டன் அதிகாரபூர்வ வேட்பாளர்.

வியாழன் ஜூலை 28, 2016

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளரை அறிவிப்பது தொடர்பான 4 நாள் மாநாடு பிலடெல்பியாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான ஹிலாரி கிளிண்டன் ஜனநாயகக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக நேற்று(செவ்வாய்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் அமெரிக்க அதிபர் வரலாற்றில் முன்னணி அரசியல் கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்ட முதல் பெண் அதிபர் வேட்பாளர் என்ற பெருமை ஹிலாரிக்கு கிடைத்துள்ளது.

உள்கட்சி வேட்பாளர் தேர்வின் போது ஹிலாரியை எதிர்த்து போட்டியிட்ட பெர்னி சாண்டர்ஸை விட ஹிலாரிக்கு அதிகமான எண்ணிக்கையில் பிரதி நிதிகளின் ஆதரவு கிடைத்துள்ளது. அதிகபட்சமாக 2,807 பிரதிநிதிகள் ஆதரவு கிடைத்ததுள்ளது.

ஹிலாரியை எதிர்த்து போட்டியிட்ட பெர்னி சாண்டர்ஸ் 1,894 பிரதிநிதிகளின் ஆதரவு கிடைத்தது. இதனையடுத்து ஜன நாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஹிலாரி பேராதரவுடன் தேர்தெடுக்கப்பட்டார்.

பெர்னி சாண்டர்ஸ் ஆதரவு

உள்கட்சி வேட்பாளர் தேர்வின் போது ஹிலாரியை எதிர்த்து போட்டியிட்ட பெர்னி சாண்டர்ஸும் பகைமையை மறந்து ஹிலாரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் சாண்டர்ஸ் பேசும்போது, “ஹிலாரி கிளிண் டனின் புதிய யோசனைகள் மற்றும் அவரது தலைமைப் பண்பின் அடிப்படையில் பார்த்தால் அடுத்த அதிபராவதற்கான தகுதி அவருக்கு உள்ளது. அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருப்பேன்” என்றார்.