ஹிலாரி கிளின்டனின் இலத்திரனியல் அஞ்சல்கள் வெளியீடு - நம்பகமான 150 செய்திகள் தணிக்கை

புதன் செப்டம்பர் 02, 2015

அமெரிக்க இராஜாங்கச் செயலாளராக இருந்த போது ஹிலாரி கிளின்டனால் அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான இலத்திரனியல் அஞ்சல் பக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் தணிக்கை செய்யப்பட்ட பல இலத்திரனியல் அஞ்சல்களும் உள்ளடங்குகின்றன. எதிர்வரும் ஆண்டு அமெரிக்காவில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு ஹிலாரி கிளின்டன் எதிர்பார்த்துள்ளார்.

 


தனது அலுவலக பணிகளை தனது தனிப்பட்ட கணினியைப் பயன்படுத்தி மேற்கொண்டமைக்காக அவர் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளார். எனினும் குறிப்பிட்ட இரகசியமாக பேணப்பட வேண்டியதாக வகைப்படுத்தப்பட்ட தகவல்கள் தனது தனிப்பட்ட கணினி மூலம் அனுப்பப்படவோ அல்லது பெறப்படவோ இல்லை என ஹிலாரி தெரிவித்துள்ளார்.

 


ஆனால் அவரால் தனது தனிப்பட்ட கணினியைப் பயன்படுத்தி பரிமாறப்பட்ட சுமார் 150 இலத்திரனியல் அஞ்சல்கள் இரகசியமாக பேணப்பட வேண்டியவையாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பற்ற கணினி முறைமையைப் பயன்படுத்தியதன் மூலம் ஹிலாரி அமெரிக்காவின் பாதுகாப்பை அபாயத்துக்குள் தள்ளியுள்ளதாக அவரது எதிர்ப்பாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

 


எது எப்படியிருப்பினும் தனது நியூயோர்க்கிலுள்ள வீட்டு கணினியின் தனிப்பட்ட இலத்திரனியல் அஞ்சலைப் பயன்படுத்தி உத்தியோகபூர்வ மின் அஞ்சல்களை பரிமாறிக் கொண்டமை தவறான செயல் என ஹிலாரி ஏற்றுக் கொண்டுள்ளார். ஹிலாரி கிளின்டன் 2009 -1-3 ஆண்டு காலப் பகுதியில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளராக பணியாற்றியிருந்தார்.

 


இந்நிலையில் அவரால் தனிப்பட்ட கணினிகளைப் பயன்படுத்தி அனுப்பப்பட்ட மொத்த 7,121 இலத்திரனியல் அஞ்சல் பக்கங்களில் 4,368 இலத்திரனியல் அஞ்சல்கள் திங்கட்கிழமை பின்னிரவு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளன. அதேசமயம் அவற்றில் சுமார் 150 செய்திகள் இரகசியமாகப் பேணப்பட வேண்டிய நம்பகமான தகவல்களைக் கொண்டிருப்பதாக கருதப்படுவதால் தணிக்கை செய்யப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் தெரிவித்தது.