ஹொங்கொங் ஊடகவியலாளர்கள் இருவருக்கு சீனாவில் சிறை

வியாழன் ஜூலை 28, 2016

ஹொங்கொங்கில் அரசியல் சஞ்சிகையொன்றை நடத்திவந்த இரு ஊடகவியலாளர்களுக்கு சீனாவில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக சீனாவில் பத்திரிகை விநியோகம் மேற்கொள்ளப்ட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு குறித்த இரண்டு பத்திரிகையாளர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த சஞ்சிகையில் சீன தலைவர்கள் குறித்த வதந்திகள் அடங்கிய கட்டுரைகள் வெளியாகி வந்தன. இவ்வாறான சஞ்சிகைகளை வெளியிட ஹொங்கொங்கில் வெளியிடுவதற்கான ஊடக சுதந்திரம் காணப்படுகிறது. எனினும் அவற்றை சீனாவில் விநியோகிப்பதற்கு அனுமதி இல்லை.

இந்நிலையில், குறித்த சஞ்சிகைகளின் பிரதிகள் சீனாவில் சட்டவிரோதமாக விநியோகிக்கப்பட்டு வந்துள்ளன. அதனையடுத்து குறித்த சஞ்சிகையின் வெளியீட்டாளர் வாங் ஜியான்மின் மற்றும் செய்தி ஆசிரியர் குவோ சொங்ஸியா ஆகியோர் கடந்த 2014ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதன்படி குறித்த வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வந்த நிலையில், சஞ்சிகையின் வெளியீட்டாளருக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், சஞ்சிகையின் செய்தி ஆசிரியராக பணியாற்றியவரை இரு ஆண்டுகளுக்கு சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, சீனாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறித்த சஞ்சிகையின் எட்டு பிரதிகளும் குறித்த சஞ்சிகையின் வெளியீட்டாரின் நண்பர்கள் மத்தியிலேயே விநியோகம் செய்யப்பட்டதாக வாதம் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.