‘இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பாடசாலைகள் விடுவிக்கப்பட வேண்டும்’

செவ்வாய் மார்ச் 13, 2018

“வலி.வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் எட்டு பாடசாலைகள் உள்ளன” என வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.  வடமாகாண சபையின் 118 ஆவது அமர்வு இன்று (13) இடம்பெற்றது.  இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடமாகாண சபை ஆரம்பிக்கும் போது, வலி.வடக்கில் 16 பாடசாலைகள் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தன. குறித்த பாடசாலைகளை விடுவிக்குமாறு கோரி பல போராட்டங்களை முன்னெடுத்து பல நடவடிக்கைகள் ஊடாக 8 பாடசாலைகளை இராணுவத்திடம் இருந்து மீட்டு மீள ஆரம்பித்துள்ளோம்.

இன்னமும் எட்டு பாடசாலைகளை மீட்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளையும் துரித கதியில் முன்னெடுக்க வேண்டும்.

அதேவேளை, மீள ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளில் மீள் குடியேற்ற அமைச்சின் ஊடாகவும் வேறு வழிகள் ஊடாகவும் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. ஆனால் பாடசாலைகளில் தளபாட வசதிகள் உட்பட பல வளப் பற்றாக்குறைகள் காணப்படுகின்றன. 

இராணுவ ஆக்கிரமிப்பில் 26 வருடங்களாக காணப்பட்ட காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி இராணுவத்தினரால் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கையளிக்கப்பட்டு பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.

தற்போது இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும், பாடசாலை கிணறு மற்றும் பாடசாலை கட்டடம் ஒன்றினை பொலிஸார் இன்னமும் மீளக் கையளிக்கவில்லை. இதனால் மாணவர்கள் நீரை பெறுவதுக்கு சிரமங்களை எதிர்நோக்குகின்றார்கள்.

வேறு நபர்கள் இவ்வாறு சட்ட முரணாக நடந்து கொண்டால் பொலிஸாரிடம் முறையிடலாம். ஆனால் இங்கே பொலிஸாரே சட்ட முரணாக நடந்து கொள்ளும் போது யாரிடம் முறையிடுவது.

பாடசாலை கிணற்றையும் கட்டடத்தையும் பொலிஸாரிடம் இருந்து விரைந்து மீட்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார். இதேவேளை, “மத்திய அரசின் கீழ் உள்ள பாடசாலைகளை பெற்றுக்கொள்ள முனையும் நாம், எமக்கு கீழ் உள்ள பாடசாலைகளை சரியாக நடத்தவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் வை.தவநாதன் தெரிவித்தார்.

மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பாடசாலைகளையும், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் இயங்கும் முன் பள்ளிகளையும் மாகாண சபை பொறுபேற்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

ஆனால் மாகாண சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பாடசாலைகளை உரிய முறையில் நடாத்த தவறி வருகின்றோம். பல பாடசாலைகளில் இன்றும் ஆசிரிய பற்றாக்குறை, வள பற்றாக்குறை என பல குறைகள் காணப்படுகின்றன. அவற்றை நிவர்த்தி செய்ய மாகாண சபையினால் முடியாத நிலைமை காணப்படுகின்றது” என தெரிவித்தார்.