‘எழுக தமிழீழம்’ நோக்கி... - கலாநிதி சேரமான்

February 22, 2017

தமிழீழ தாயகத்தின் ஒருமைப்பாட்டைப் பேணிப் பாதுகாப்பதில் மானமுள்ள ஒவ்வொரு தமிழர்களுமே உறுதியாக உள்ளார்கள் என்பதை எதிரிக்கும், பிரதேசவாத வெறியர்களுக்கும் உணர்த்தும் வகையில் கடந்த 10.02.2017 அன்று மட்டக்களப்பில் ‘எழுக தமிழ்’ பேரணி நிகழ்ந்தேறியிருக்கின்றது.

தென்தமிழீழ மக்களின் எழுச்சியைத் தமக்குக் கிடைத்த வெற்றியாக சி.விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையினர் உரிமை கோரினாலும், உண்மையில் இது தமிழ்த் தேசியத்திற்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்பட வேண்டும்.

அவ்வாறு தமிழ் மக்கள் பேரவையினர் உரிமை கோருவதானாலும், அவ் உரிமை கோரலின் பெரும் பகுதி அவ் அமைப்பின் அங்கத்துவக் கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே உரித்தானது. ஏனென்றால் ‘எழுக தமிழ்’ பேரணியின் வெற்றிக்காகத் தென்தமிழீழத்தின் பட்டி தொட்டிகள் தோறும் பயணங்களை மேற்கொண்டு பரப்புரைகளைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரே முன்னெடுத்திருந்தார்கள். ஏன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணியின் வெற்றிக்காகப் பட்டி தொட்டிகள் தோறும் பரப்புரை செய்த பெருமையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரையே சாரும்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தோற்றம் பெற்ற காலம்தொட்டு அதனை அழிப்பதற்காகவும், உடைப்பதற்காகவும் இரா.சம்பந்தரின் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்து வரும் முயற்சிகள் பரகசியமானவை. இதற்கான முயற்சிகளை வடதமிழீழத்தில் மட்டுமன்றி, தென்தமிழீழத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் சம்பந்தர் கும்பல் தொடர்ச்சியாகவே மேற்கொண்டு வருகின்றது. வெளிப்படையாகவே தமிழ்த் தேசிய முன்னணியை நிந்திக்கும் சம்பந்தரின் அடிவருடிகள் தொடக்கம், மதுபானப் புட்டிகள் திறக்கப்படாதிருக்கும் பொழுது மதில்மேல் பூனைகளாக அமர்ந்திருந்து ஒப்புக்குத் தமிழ்த் தேசியம் பேசி அரட்டை அடிப்பதையும், மதுபானப் புட்டிகள் காலியானதும் சீறியெழும் எரிமலையாகத் தமது மனதுக்குள் மறைத்து வைத்திருக்கும் பிரதேசவாத வெறியைக் கக்கி சம்பந்தரை சாணக்கியராகப் புகழ்ந்துரைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள பிரதேசவாதிகள் வரை தமிழ்;த் தேசிய மக்கள் முன்னணியை அழிப்பதிலும், உடைப்பதிலும் கங்கணம் கட்டி நிற்பவர்கள் பலர்.

ஏன் கடந்த 2015ஆம் ஆண்டு ஆவணி மாதம் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான பரப்புரைகளைத் தென்தமிழீழத்தில் தமிழ்த் தேசிய முன்னணி முன்னெடுத்த பொழுது அதனை முடக்குவதற்கான முயற்சிகளை அப்பொழுது இலண்டனில் இருந்தவாறு சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி போன்றவர்கள் மேற்கொண்டதும் வெளியில் வராத விடயங்கள் தான்.

இவ்வாறு புலித்தோல் அணிந்த நரிகளும், சம்பந்தரின் அடிவருடிகளும், பிரதேசவாத வெறி கொண்ட மதில்மேல் பூனைகளும் மேற்கொள்ளும் நயவஞ்சனைகளுக்கு மத்தியில் தென்தமிழீழ மக்களிடையே அரசியல் பணிபுரிந்து அம்மக்களைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அணிதிரட்டியதென்பது சாதாரணமாகப் பார்க்கக்கூடிய ஒரு விடயம் அல்ல.

ஆனாலும் தமிழீழ தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றீடான வலிமை மிக்க தமிழ்த் தேசிய சக்தியாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பரிணமிப்பதற்கு இவ்வாறான எழுச்சிப் பேரணிகள் மட்டும் போதுமானவை அல்ல. அல்லது வெறுமனவே நாடாளுமன்ற ஆசனங்களை அது குறிவைப்பதும் சாணக்கியமான மூலோபாயம் அல்ல.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பிற்குப் பின்னரான சூழமைவில் தமது அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளையும், அரசியல் அபிலாசைகளையும் பூர்த்தி செய்வதற்கு மூன்று அரச கட்டமைப்புக்களைத் தமிழீழ தாயக மக்கள் நம்பியிருக்கின்றார்கள்: நாடாளுமன்றம், மாகாண சபைகள், உள்@ராட்சி மன்றங்கள் ஆகியவைதான் அந்த மூன்று கட்டமைப்புக்கள்.

இவற்றில் நாடாளுமன்றக் கட்டமைப்பின் ஊடாகத் தமிழீழ மக்களின் நலன்களைப் பூர்த்தி செய்வதற்குக் கடந்த எட்டு ஆண்டுகளில் முயற்சிகளை எடுத்த அளவிற்கு ஏனைய இரண்டு கட்டமைப்புக்கள் ஊடாகப் போதிய முயற்சிகளைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எடுக்கவில்லை என்றே கூற வேண்டும். அதிலும் மாகாண சபைக் கட்டமைப்பில் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருப்பதற்கு எந்த முயற்சிகளையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எடுக்கவில்லை.

மாகாண சபைத் தேர்தல்களில் தாம் போட்டியிடுவது ஒன்றுபட்ட தாயகக் கோட்பாட்டிற்கு விரோதமானது என்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் வாதமாகும். இவ்வாதத்தின் அடிப்படையிலேயே கடந்த தடவைகள் நடைபெற்ற கிழக்கு மற்றும் வடக்கு மாகாண சபைத் தேர்தல்களைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புறக்கணித்திருந்தது.

மறுபுறத்தில் இதனைத் தனக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகப் பயன்படுத்திக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இரண்டு மாகாண சபைகளின் ஆசனங்களிலும் தனது ஆட்களை இருத்திக் கொண்டது.

ஒரு விதத்தில் கடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழீழ தாயக மக்களின் வாக்கு வங்கியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசப்படுத்துவதற்கு இது அனுகூலமாக அமைந்தது என்றே கூற வேண்டும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் எந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புறக்கணித்ததோ, அந்த மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான சி.விக்னேஸ்வரன் அவர்களைத் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பின் ஊடாக இன்று அது முன்னிறுத்திச் செயற்படுவதுதான்.

கொள்கை என்று வரும் பொழுது எந்த நேரமும் தடம்புரளக் கூடியவர் சி.விக்னேஸ்வரன். இதனைப் பல தடவைகள் அவர் பட்டவர்த்தனமாக்கியிருக்கின்றார். சௌமியமூர்த்தி தொண்டமானின் சந்தர்ப்பவாத அரசியலை சாணக்கியம் என்று புகழ்ந்துரைக்கும் சி.விக்னேஸ்வரனிடமிருந்து சந்தர்ப்பாத அரசியலைத் தவிர நாம் வேறு எதனையும் எதிர்பார்க்க முடியாது. அப்படிப்பட்ட ஒருவரைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நம்பியிருப்பது ஒருநாள் அதற்கே ஆபத்தாக முடியும்.

இது மட்டுமன்றி இன்னுமொரு பெரும் தவறையும் கடந்த எட்டு ஆண்டுகளாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுகின்றது. புலம்பெயர் தமிழர்களிடையே தமக்கு உள்ள செல்வாக்கு தமிழீழ தாயக மக்களின் ஆதரவைப் பெறுவதற்குப் போதுமானது என்ற தப்புக் கணக்குத்தான் அது.

தமிழீழ தாயக மக்களில் பெரும்பாலானவர்கள் புலம்பெயர் மக்களை நிதியுதவிகளை வாரி வழங்கும் தானியங்கி இயந்திரங்களாக மட்டுமே பார்க்கின்றார்களே தவிர, அதற்கு அப்பால் தமது அரசியல் முடிவுகளை நிர்ணயிப்பவர்களாகவோ, அன்றி அவற்றில் தாக்கம் செலுத்துவதற்கு உரிமையுடையவர்களாகவோ கருதுவது கிடையாது. ‘நீங்கள் வசதியாக வாழ்கின்றீர்கள்: எனவே எங்களுக்கு உதவி செய்து எமது வாழ்வை மேம்படுத்துவது உங்கள் கடமை. ஆனால் இங்கு எப்படியான அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் கேட்கும் பொழுது மட்டும் நீங்கள் அரசியல் பேசுங்கள்’ என்பதுதான் புலம்பெயர் தமிழர்களை நோக்கிய தாயக மக்களில் பெரும்பாலானவர்களின் செய்தியாக இருக்கின்றது. இதுதான் யதார்த்தம்.

2016ஆம் ஆண்டிற்குள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவதாக சம்பந்தரும், அவரது பரிவாரங்களுக்கும் வழங்கிய வாக்குறுதி கானல்நீரில் மூழ்கிய காகிதக் கப்பலாகி விட்டது. 2016இல் தவறிப் போன அரசியல் தீர்வு 2017இல் கைகூடும் என்று சம்பந்தருக்குப் பரிவட்டம் கட்டுவோர் தண்டோர போட்டுக் கூறினாலும், பதின்மூன்றாம் திருத்தச் சட்டம் என்ற கறள் பிடித்த பெட்டகத்திற்குள் முடங்கிக் கிடக்கும் மாகாண சபைப் பொறிமுறைக்கு அப்பால் சென்று எந்தக் காலத்திலும் தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வையும் சிங்களம் வழங்கப் போவதில்லை என்பதுதான் யதார்த்தம். இன்னொரு விதத்தில் கூறுவதானால், தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் எவ்வளவுதான் தலைகீழாகத் தவம் புரிந்தாலும், மீண்டும் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாகவே தமிழர்களுக்கான அரசியல் தீர்வு இருக்கப் போகின்றது.

அதாவது இராசதந்திரப் போராட்டம் என்ற சம்பந்தரின் மாயமானுக்குள் முடங்கிக் கிடக்கும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட அசைவியக்கம் புதிய பரிமாணம் எடுக்காத வரைக்கும் இதுதான் நடக்கப் போகின்றது.

இந்த மாயமானிடமிருந்து தமிழீழ மக்களைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மீட்பதாயின், தமிழீழ அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையாளும் யுக்திகளை அது நுணுகி ஆராய்ந்து தனது வியூகங்களை மறுசீரமைத்துக் கொள்ள வேண்டும்.

இதுதான் ‘எழுக தமிழ்’ எதிர்காலத்தில் ‘எழுக தமிழீழமாக’ வீறுகொண்டெழுவதற்கும், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட அசைவியக்கம் புதிய பரிமாணத்தைப் பெறுவதற்கும் வழிகோலும்.

நன்றி: ஈழமுரசு

செய்திகள்
சனி April 21, 2018

புலம்பெயர் வாழ் தமிழ்ச் சிறார்களின் தாய்மொழிக் கல்விக்கு வழிசமைக்கும் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பிரான்சு...

ஞாயிறு April 08, 2018

விடுதலைப் புலிகளிடம் உயிருடன் பிடிபட்டபோது அந்த சிங்கள இராணுவச் சிப்பாய் தன் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே எண்ணியிருந்தான்.