“கச்சநத்தம் படுகொலையின் முக்கியக் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை!”

வெள்ளி ஜூன் 08, 2018

“கச்சநத்தம் சாதிவெறிப் படுகொலையில் ஈடுபட்ட முக்கியமான குற்றவாளிகள் சிலர் இன்னும் கைது செய்யப்படவில்லை” என மதுரையில், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் - கச்சநத்தத்தில், கடந்த 26.05.2018 இரவு, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சாதி ஆதிக்க வெறியர்கள் நடத்திய கொடுந்தாக்குதலில் 3 பேர் உயிரிழந்து, பலர் மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இப்படுகொலையை சனநாயக ஆற்றல்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாகக் கண்டித்தனர். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை வெளியிட்டார்.

படுகொலையானவர்களின் உடலைப் பெற மறுத்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு திருவள்ளுவர் சிலை அருகில் அவர்களது உறவினர்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்தியபோது, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரெ. இராசு, பொதுக்குழு உறுப்பினர் தோழர் கதிர்நிலவன், தோழர் கரிகாலன் உள்ளிட்டோர் அதில் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தினர். 

சாதி வெறியாட்டத்தில் மூவர் கொலை செய்யப்பட்டு, ஐவர் படுகாயப்படுத்தப்பட்ட கச்சநத்தம் கிராமத்திற்கு இன்று (07.06.2018) காலை, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு தோழர்கள் நா. வைகறை, ம. இலட்சுமி, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் மதுரை அருணா, நடுவண் குழு உறுப்பினர் தோழர் பே. மேரி, பொதுக்குழு தோழர் கதிர்நிலவன், தோழர்கள் கரிகாலன், சேவியர், இளவழகன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர். உயிரிழந்த சண்முகநாதன், ஆறுமுகசாமி, சந்திரசேகரன் ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று, பெற்றோர் மற்றும் உறவினர்களைச் சந்தித்தனர். மூவரும் புதைக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

மூவேந்தர் புலிப்படை அமைப்பாளர் தோழர் வழக்கறிஞர் மு.கா. வையவன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பரமக்குடி பசுமலை, புரட்சிகர இளைஞர் முன்னணி சிவகங்கைப் பொறுப்பாளர் தோழர் இளஞ்சென்னியன் ஆகியோர் உடன் வந்தனர்.

அதன்பிறகு, கடுமையான வெட்டுக் காயங்களால் எலும்பு முறிவு ஏற்பட்டு, மதுரை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தனசேகர், சுகுமார், மலைச்சாமி ஆகியோரைச் சந்தித்து நலம் விசாரித்தனர். அங்கு ஊடகவியலாளரைச் சந்தித்து தோழர் பெ. மணியரசன், பின் வருமாறு கூறினார் :

“கச்சநத்தத்தில் பட்டியல் வகுப்பு மக்களை வீடுகளுக்குச் சென்று அரிவாள், வாள் போன்ற ஆயுதங்களால் வெட்டி – மூன்று பேரை படுகொலை செய்து, ஐந்து பேரைப் படுகாயப்படுத்தியவர்கள் உள்ளூர் ஆதிக்கவெறியர்கள் மட்டுமல்ல! அவர்கள் கூலிப்படையினரை அழைத்து வந்திருப்பதும் தெரிய வருகிறது.

மேற்கண்ட உள்ளூர் குற்றவாளிகள் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்ததை கச்சநத்தம் மக்கள் மட்டுமின்றி, பக்கத்து ஊர்க்காரர்களும் சொன்னார்கள். காவல்துறையினரின் மறைமுக ஒப்புதலோடுதான் தொடர்ச்சியாக கஞ்சா விற்பனை அவ்வூர்களில் நடந்திருக்கிறது. இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், முக்கியமான உள்ளூர் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருக்கிறார்கள் என்று கச்சநத்தம் மக்கள் கூறுவது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு காவல்துறை ஏன் அவர்களை இன்னும் கைது செய்யவில்லை? எனவே, உடனடியாக அவர்களைக் காவல்துறையினர் கைது செய்ய வேண்டும்!

தாக்குதல் நடந்த நாளில், இரவு 9.30 மணியளவில், பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளின் கதவைத் தட்டி திறக்க வைத்து ஆண்களை வெளியே வரச் செய்து, கொலை செய்வதற்கு உதவிய - குற்றம்சாட்டப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண் ஒருவர் இவ்வழக்கில் இன்னும் சேர்க்கப்படாமல் இருக்கிறார். அவரைக் கைது செய்ய வேண்டுமென்றும் மக்கள் கோரிக்கை விடுத்தார்கள். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கச்சநத்தத்தில் சேதப்படுத்தப்பட்ட வீடுகளை தமிழ்நாடு அரசே கட்டிக் கொடுக்க வேண்டும்.  

இவ்வளவு காலம் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சி செய்து வந்தத் தமிழ்நாட்டில், இன்றைக்கும் சாதிவெறியுடன் படுகொலைகள் நடப்பது கடும் கண்டனத்திற்கும் வருத்தத்திற்கும் உரியது. மக்களிடம் சாதி வேற்றுமைகளைக் களைந்து ஒரு இணக்க மனப்பான்மையை உருவாக்க தி.மு.க. - அ.தி.மு.க. ஆட்சிகள் தவறிவிட்டன. சாதியைப் பயன்படுத்தி தேர்தல் அரசியல் நடத்தி, சாதி வாதத்தை ஊக்குவித்து, மக்களிடம் சாதி வெறியைத் தீவிரமாக்கியதில் இவ்விரு கட்சிகளுக்கும் முகாமையான பங்கிருக்கிறது. 

எனவே, இனியாவது “தமிழர்கள் அனைவரும் சமம்” என்ற ஓர்மை உணர்வை வளர்த்து, அனைவரையும் ஒருங்கிணைத்து வளர்க்கும் அரசியலைக் கொண்டு வர நாம் அனைவரும் பாடுபட வேண்டும்”.இவ்வாறு தோழர் பெ. மணியரசன் தெரிவித்தார்.

கச்சநத்தம் சாதி வெறிப் படுகொலையைக் கண்டித்தும், கைது செய்யப்படாதக் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் மதுரை – பெத்தானியாபுரத்தில், நாளை (08.06.2018) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. பல்வேறு அமைப்பினரும், சனநாயக ஆற்றல்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுக்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் அன்புரிமையுடன் அழைக்கிறது!