“நீதியின் பக்கம் நின்று உறுதியுடன் போராடினால் வெற்றி நிச்சயம்!”

Thursday November 01, 2018

கிருட்டிணகிரி மாவட்டம் - இராயக்கோட்டையில், வறட்சியைப் போக்கி தென்பெண்ணை ஆற்றிலிருந்து நீர் கொண்டு வரும் தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் திட்டத்தை செயல்படுத்தக் கோரி, அப்பகுதி மக்களுடன் இணைந்து தமிழக உழவர் முன்னணி பல்லாண்டு காலமாக போராடி வந்த நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு அக்கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. இதனையடுத்து, தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தும், திட்டத்தை நடப்பு நிதியாண்டிலேயே நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தியும் இராயக்கோட்டையில் தமிழக உழவர் முன்னணி சார்பில் எழுச்சிமிகு உழவர் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

நடைபெற்ற இந்நிகழ்வின் தொடக்கமாக, இன்று (31.10.2018) காலை, இராயக்கோட்டை தக்காளி மண்டி அருகிலிருந்து எழுச்சிமிகு உழவர் பேரணி நடைபெற்றது. பேரணிக்கு எக்காந்தப்பள்ளி திரு. சா. வாசு தலைமை தாங்கினார். திருவாளர்கள் கு. மாரியப்பன், மு. வேலாயுதம், முனியப்பன், வை. சீனிவாசன், மு. கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெண்ணாடம் திருவள்ளுவர் தப்பாட்டக் குழுவினரின் எழுச்சிப் பறையிசையும், தருமபுரி  தமிழர் தற்காப்புப் பள்ளி மாணவர்களின் சிலம்பம் உள்ளிட்ட தமிழர் தற்காப்புக் கலை நிகழ்ச்சியும் பேரணியில் வந்தோரை உணர்ச்சி கொள்ளச் செய்தது.

பேரணியின்போது, தமிழினத்தின் மரபு அறிவியலாளர் ஐயா கோ. நம்மாழ்வார் அவர்களின் படத்தையும், தென்பெண்ணை கிளைவாய்க்கால் திட்டம் சாத்தியமானதுதான் என அறிவித்து, அத்திட்டத்திற்குப் பல்வேறு வகையிலும் உதவிகள் புரிந்த – தமிழ்நாடு மூத்தப் பொறியாளர்கள் சங்கத் தலைவர் பொறியாளர் ஆர்.வி.எஸ். விசயக்குமார் அவர்களின் படத்தையும் உழவர்கள் தங்கள் கைகளில் ஏந்திவந்து நன்றி தெரிவித்தனர்.

இராயக்கோட்டை பேருந்து நிலையத்தில் பேரணி நிறைவுற்ற நிலையில், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு, தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் திரு. தூ. தூருவாசன் தலைமை தாங்கினார். தமிழக உழவர் முன்னணித் தலைமை ஆலோசகர் தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புரையாற்றினார். தமிழக உழவர் முன்னணி கிருட்டிணகிரி மாவட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து வரவேற்றார். தென்பெண்ணை தூள்செட்டி ஏரி ஒருங்கிணைப்புக் குழு திரு. ப. நஞ்சப்பன், மருத்துவர் இல. இரவிச்சந்திரன், திரு. கு. பெரியசாமி, தமிழ்த்தேசியப் பேரியக்க ஒசூர் செயலாளர் தோழர் பி. சுப்பிரமணியன், மைலான் தொழிலாளர் சங்கத் தலைவர் திரு. வெங்கடேசன், அலேசிபம் திரு. அனுமந்தப்பா, உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றினர்.

தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் பேசியதன் எழுத்து வடிவம் :

“எழுச்சிமிகு இப்பேரணியிலும், பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றுள்ள உழவர்களுக்கும், பொதுமக்களுக்கும் முதலில் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வறட்சியில் உள்ள இராயக்கோட்டை பகுதிக்கு தென்பெண்ணை கிளைவாய்க்கால் வழியே தண்ணீர் கொண்டு வரும் இத்திட்டத்தை, மறைந்த உழவர் திரு. முனியப்பன் அவர்கள் முதன் முதலில் முன்முயற்சி எடுத்தார். இப்பகுதி பெரியவர்கள் அதை முன்னெடுத்துச் சென்றனர்.

அதன்பிறகு, இப்பகுதியின் கிராமங்களில் தமிழக உழவர் முன்னணியின் கிளை அமைப்புகளை உருவாக்கி, முதல் ஆர்ப்பாட்டத்தை இதே இராயக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடத்தியபோது, அதில் 18 பேர்தான் பங்கேற்றனர். நாம் சரியான திட்டத்தை முன்வைக்கும்போது, அதை நம்பிக்கையுடன் உறுதியாக மக்களிடம் பரப்புரை செய்தால், நம்மால் நிச்சயமாக வெற்றி பெற முடியும் என்று தொடர்ந்து போராடினோம்.

ஆதிக்க அரசுகளை உணர வைக்க முடியாது. அவர்களைப் பணிய வைக்கத்தான் முடியும்! எனவே, அரசைப் பணிய வைக்கும் அளவிற்குப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென தோழர் தூருவாசன், வழக்கறிஞர் மாரிமுத்து உள்ளிட்ட தோழர்கள் தொடர்ந்து கடுமையாகப் பணியாற்றினார்கள். போராட்டங்களை விரிவாகவும் தொடர்ச்சியாகவும் நடத்தினோம். ஆர்ப்பாட்டம், பேரணி, பொதுக்கூட்டம் என பல்வேறு வடிவங்களில் நடத்தினோம்.

இன்னொரு பக்கத்தில் அரசுக்கும் இது சென்றது. அதன்பின், 2010ஆம் ஆண்டு இத்திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு முதல் கட்ட ஆய்வை  மேற்கொண்டது. 2012 - 2013ஆம் நிதி ஆண்டில், இத்திட்டம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, 2014ஆம் ஆண்டு எப்ரலில் இந்தத் திட்டத்துக்கு ரூ.22.20 கோடி செலவாகும் என மதிப்பீடும் செய்யப்பட்டது. இப்போது இத்திட்டம் தூள்செட்டி ஏரி வரை நீட்டிக்கப்பட்டு, 67 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை அரசிடம் முன்வைத்தபோது, தென்பெண்ணை ஆறு பள்ளத்தில் இருக்கிறது, ஆனால் உங்கள் பகுதி மேட்டில் இருக்கிறது என்று சாத்தியக் கூறு அறிக்கையில் மறுத்துவிட்டார்கள். அதன்பின், மதுரையிலிருந்த தமிழ்நாடு மூத்தப் பொறியாளர்கள் சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளராகவும் பணியாற்றிய பொறியாளர் ஆர்.வி.எஸ். விசயக்குமார் அவர்களை சந்தித்து இச்சிக்கலை விளக்கினோம்.

அவர் சாட்டிலைட் வழியில் சில கணக்கீடுகள் செய்து, ஒரே ஒரு இடத்தில்தான் மேடாக இருக்கிறது, எனவே இத்திட்டத்தை இயற்கையான புவியீர்ப்பிலேயே செய்து முடிக்கலாம் என்று நம்பிக்கை அளித்தார். மேலும் பல உதவிகள் புரிந்து எங்களுக்கு வழிகாட்டினார். அதனால்தான் பொறியாளர் விசயக்குமார் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவரது படத்தை இங்கே நம் உழவர்கள் தங்கள் கைகளில் பிடித்திருக்கிறார்கள்.

அவர் இந்தச் சிக்கலில் மட்டுமல்ல, முல்லைப் பெரியாறு பிரச்சினை - காவிரிச் சிக்கல் என தொடர்ந்து தமிழ்நாடு மூத்தப் பொறியாளர்கள் சங்கம் வழியாக நம்மோடு செயல்பட்டு வந்தவர். கடந்த 2016ஆம் ஆண்டு அவர் காலமானார்.

அதேபோல், 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு இடைவிடாத போராட்டங்கள் நடைபெற்ற போது, இராயக்கோட்டையில் நாம் முதன் முதலில் நடத்திய எழுச்சிமிகுப் பேரணியை மறைந்த உழவர் தலைவர் ஐயா கோ.  நம்மாழ்வார் அவர்கள் தொடங்கி வைத்தார். பேரணியின் முடிவில் கடுமையான மழைப் பொழிந்ததால், அவர் மட்டும் பேசியது இன்றும் நினைவில் இருக்கிறது.

அதன்பிறகு, கிருட்டிணகிரியில் பேரணி, இராயக்கோட்டை முழு அடைப்பு, மறியல் என தொடர்ந்து செயல்பட்டு இத்திட்டத்தை செயலுக்குக் கொண்டு வர நாம் உழைத்துள்ளோம். அதில் பலரும் பங்காற்றியுள்ளனர். ஓசூர் அசோக் லேலண்ட் தொழிலாளர் பாதுகாப்புப் பேரவைத் தொழிலாளர்களும், தமிழின உணர்வாளர்களும் தொடர்ந்து இப்போராட்டங்களில் பங்கெடுத்து வந்தனர்.

தூள்செட்டி ஏரியைச் சேர்ந்த உழவர்களும் நம்மோடு இணைந்தார்கள். தூள் செட்டி ஏரி ஒருங்கிணைப்பு சங்கம் சார்பில் 2,000 உழவர்கள் பங்கேற்ற கோரிக்கைப் பேரணி தருமபுரியில் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட நலன் சார்ந்த பல பிரச்சினைகளை முன்வைத்து செயலாற்றி வரும் மருத்துவர் இரவிச்சந்திரன் போன்ற பலரும் நம்மோடு இணைந்தனர். எனவேதான், இக்கோரிக்கையை அரசு ஏற்றுக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. தமிழ்நாடு அரசுக்கு இந்நேரத்தில் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

இதன்வழியே நமக்குக் கிடைக்கும் படிப்பினை என்ன? கட்சிகள் கடந்து, சாதிகள் கடந்து, உழவர்களிடமிருந்து தலைமைகள் உருவாகி, தன்னெழுச்சியுடன் உழவர்கள் அணிதிரண்டால், பொது மக்கள் அணிவகுத்தால் நாம் போராட்டங்கள் வழியே எதையும் சாதிக்க முடியும்! உழவர்களாக – தமிழர்களாக இணைந்து போராடினால் நமக்கான திட்டங்களை நாம் பெற முடியும். ஆனால், ஒரே நிபந்தனை - நீதியைப் பெறும் வரை நாம் சோர்ந்து விடாமல், நீதியின் பக்கம் நின்று விடாப்பிடியாக போராட வேண்டும்! அப்படிப் போராடித்தான் இத்திட்டம் இன்று செயலுக்கு வர உள்ளது.

வரும் நவம்பர் முதல் வாரத்திலேயே தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்கான அரசாணையை வெளியிட வேண்டும் என்பதையும், நடப்பு நிதியாண்டுக்குள்ளாகவே இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் அரசுக்கு இத்தருணத்தில் நாங்கள் கோரிக்கையை முன்வைக்கிறோம்.

கிளைவாய்க்காலுக்கு நிலம் எடுக்கும்போது, அரசுக்கு சிக்கல் எழக்கூடாது என்பதற்காக தமிழக உழவர் முன்னணியின் பொறுப்பாளர்கள் தூருவாசன், மாரிமுத்து போன்றோர் ஒவ்வொரு நிலத்தின் உரிமையாளர்களுடனும், உழவர்களுடனும் இத்திட்டத்தின் நீண்டகாலப் பயன்களை விளக்கி – வேண்டுகோள் வைத்து, பெரும்பணியாற்றியுள்ளனர். எனவே, அரசு தயங்காமல் இத்திட்டத்தை நடப்பு ஆண்டிலேயே செயல்படுத்தி முடிக்க வேண்டும்.

இத்திட்டத்தோடு மட்டும் நம் போராட்டம் முடிந்துவிடப் போவதில்லை. உழவர்களுக்கு அடுத்தடுத்தக் கோரிக்கைகள் இருக்கின்றன. இந்த வெற்றியை எடுத்துச் சொல்லி, அனைவரையும் நாம் அணிதிரட்டி, நம் ஆற்றல் என்ன என்பதை புரிய வைத்தால், நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்! நன்றி வணக்கம்!”இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.

பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் நூற்றுக்கணக்கான உழவர்கள் எழுச்சியுடன் பங்கேற்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், பொதுக்குழு தோழர்கள் ஓசூர் ப. செம்பிரிதி, தருமபுரி க. விசயன், பெண்ணாடம் த.உ.மு. பொறுப்பாளர் தோழர் இராமகிருட்டிணன், தோழர் முருகேசன் மற்றும் ஒசூர் கிளை தோழர்கள் திரளாகப் பங்கேற்றனர்.