“பா.ஜனதா கட்சியிலிருந்து வெளியேறிய பெண் எம்.பி.!

Thursday December 06, 2018

பா.ஜனதா பல்வேறு சமுதாய மக்களுக்கு இடையே சதித்திட்டங்களை கட்டவிழ்த்து விடுகிறது என்ற கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்த அக்கட்சியின் தலித் எம்.பி. சாத்வி சாவித்ரி பாய் புலே கட்சியை விட்டு வெளியேறினார்.

சாத்வி சாவித்ரி பாய் புலே சமீபத்தில் ஹனுமன் குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மனுதர்மவாதிகளால் (மனுதர்மத்தை பின்பற்றுபவர்கள்) அடிமையாக வர்ணிக்கப்பட்டவர் ஹனுமன். தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை குரங்குகள், அரக்கர்கள் என்று மனுவாதிகள் அழைக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹனுமனை தலித் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சாவித்ரியும் இதுபோன்ற கருத்தை தெரிவித்தார். மேலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரம் தொடர்பாக பேசுகையில், பிராமணர்களுக்கு வேண்டுமானால் அந்த கோவிலால் பலன் கிடைக்கலாம். கோவில் கட்ட அளிக்கப்படும் நிதி அவர்கள் (பிராமணர்கள்) லாபமடையவும், எங்கள் சமூகம் (தலித்) மேலும் அடிமையாக்கப்படவுமே உதவும் என்றார்.

தலித் மக்களை மனிதர்களாக மதிப்பதில்லை என்று குற்றம் சாட்டினார். சாத்வி சாவித்ரி பாய் புலேவின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னதாக பா.ஜனதா தலைவர்கள் தலித் மக்களின் வீடுகளுக்கு சென்று சாப்பிடுவது தொடர்பாக கேள்வியையும் எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். பா.ஜனதாவின் அடிப்படை உறுப்பினர் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாக குறிப்பிட்ட சாவித்ரி பாய், இன்றையிலிருந்து பா.ஜனதாவுக்கும் எனக்கும் எந்தஒரு தொடர்பும் கிடையாது.

நான் தலித் என்பதால் என்னுடைய குரல் கட்சியில் ஒடுக்கப்பட்டது. தலித் மற்றும் அவர்களுடைய உரிமைகளுக்கு எதிராக மிகப்பெரிய சதித்திட்டம் உள்ளது. தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு மெதுவாக நிராகரிக்கப்படுகிறது.

அரசியலமைப்புக்கான என்னுடைய போராட்டம் தொடரும். ஜனவரி 23-ல் லக்னோவில் மெகா பேரணியை நடத்த உள்ளேன் என்று கூறியுள்ளார்.