10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

சனி மே 23, 2020

 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தி சோதிக்கும் திட்டத்தை கையில் எடுப்பதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உலகமே வியந்து போகிறது.

ஊரடங்கு... வீடுகளுக்குள் மக்கள் முடக்கம்... முக கவசம்... தனிமனித இடைவெளியை பின்பற்றல்... இப்படி எத்தனை எத்தனையோ உத்திகளை நீங்கள் வகுத்து செயல்படுத்தி வந்தாலும் எதற்கும் நான் கட்டுப்பட மாட்டேன் என்று சொல்வது போலத்தான் கொரோனா வைரஸ் தினமும் உலகமெங்கும் 1 லட்சத்துக்கும் அதிகமானோரை தொடர்ந்து பாதித்து வருகிறது. இதை கண்டு தான் உலகம் வியக்கிறது. இனி என்னவெல்லாம் ஆகப்போகிறதோ என அஞ்சவும் செய்கிறது.

3 லட்சத்து 36 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோரை பலி கொண்டாயிற்று. ஆனாலும் கொரோனா வைரசின் ஆவேச பசி அடங்கவில்லை.

உலக நாடுகளின் பொருளாதாரம் ஒரு பக்கம் சரிந்து கொண்டே போகிறது. நாளுக்கு நாள் மக்கள் பிரச்சனைகளால் அல்லாடுகிறார்கள். வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டு ஒரு வேளை கஞ்சிக்கே வழியின்றி செத்துப்போன நாயின் மாமிசத்தை மனிதன் சாப்பிடும் அவலம் ராஜஸ்தானில் நேரிட்டிருப்பது இதுவரை உலகம் காணாதது.

முதல் அலையடித்தே மீளாத மனித குலத்தை, இரண்டாவது அலை என்னவெல்லாம் செய்யப்போகிறதோ என்று விஞ்ஞானிகளே கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த கொரோனா வைரசுக்கு இப்போதைக்கு முடிவு கட்ட வேண்டும் என்றால் உடனடி தேவை தடுப்பூசிதான். அதைத் தவிர வேறு வழியில்லை.

அதனால்தான் இதுவரை இல்லாத அளவுக்கு உலகமெங்கும் உள்ள விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

பிற எந்த நாட்டையும் விட கொரோனா வைரஸ் அமெரிக்காவில்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இது அமெரிக்காவில் நவம்பர் 3-ந் தேதி நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுமோ என்று கலங்குகிறார் டிரம்ப்.

எனவேதான் தேர்தலுக்கு முன்பாக தடுப்பூசி கண்டுபிடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று அவர் தன் நாட்டு விஞ்ஞானிகளை விரட்டிக்கொண்டிருக்கிறார்.

ஆனாலும் இதில் முந்திச்சென்று கொண்டிருப்பது என்னவோ, இங்கிலாந்துதான்.

பாவம், இங்கிலாந்து. ஐரோப்பிய நாடுகளின் தொற்றுமையம் அந்த நாடுதான் என்று சொல்கிற வகையில் அங்கு 2½ லட்சம் பேருக்கும் அதிகமானோரை இந்த வைரஸ் தொற்றி இருக்கிறது. 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார்கள். எனவே இங்கிலாந்து, தடுப்பூசி கண்டுபிடிப்பதில் கூடுதல் கவனமும், அக்கறையும் செலுத்துகிறது.

உலகளவில் பார்த்தால் ஒரு டஜனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, ஒன்று மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை நடத்தும் ஆரம்ப கட்டத்திலோ அல்லது தொடங்குவதற்கான ஆயத்த நிலையிலோ இருக்கின்றன. பெரும்பாலும் சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்தான் இதில் வேகம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில்தான் இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி மனிதர்களுக்கு செலுத்துவதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்கள் என்றே சொல்ல முடியும்.

ஏற்கனவே 1000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பூசியை போடும் பணியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தடுப்பூசியின் பாதுகாப்புத்தன்மை ஆராயப்படும்.

அடுத்த கட்டமாக மொத்தமாக 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு (10 ஆயிரத்து 260 பேருக்கு) தடுப்பூசியை செலுத்தி சோதிக்கும் திட்டத்தை கையில் எடுப்பதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நேற்று அறிவித்தனர்.

முதியோர், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி போடப்போகிறார்கள்.

இதுபற்றி ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குழுவின் தலைவர் ஆண்ட்ரூ பொல்லார்ட் கூறும்போது, “கொரோனாவுக்கான தடுப்பூசி தொடர்பான மருத்துவ ஆய்வுகள் மிகச்சிறப்பாக முன்னேறி வருகின்றன. இப்போது இந்த தடுப்பூசி முதியோருக்கு எப்படி வேலை செய்கிறது என்பதை மதிப்பிடப்போகிறோம். பெரிய அளவிலான மக்கள் கூட்டத்துக்கு இந்த தடுப்பூசி பாதுகாப்பு அளிக்குமா என்பதை சோதிப்பதற்கான ஆய்வுகளை தொடங்கப்போகிறோம்” என குறிப்பிட்டார்.

இந்த வார தொடக்கத்தில் இங்கிலாந்தின் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு உருவாக்கியுள்ள தடுப்பூசியின் 40 கோடி ‘டோஸ்’களுக்கான ஒப்பந்தங்கள் கிடைத்திருப்பதாக கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி திட்டத்தில் அமெரிக்கா 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.7,500 கோடி) முதலீடு செய்திருக்கிறது.

தற்போது ஆராய்ச்சியில் உள்ள பெரும்பாலான தடுப்பூசிகள், புதிய கொரோனா வைரசின் வெளிப்புற மேற்பரப்பை கட்டுப்படுத்தும் ‘ஸ்பைக்கி’ புரதத்தை அடையாளம் காண நோய் எதிர்ப்பு மண்டலத்தை பயிற்றுவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளன, எனவே உண்மையான தொற்று ஏற்பட்டால் அதை இவை தாக்கும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.

தடுப்பூசியை பல்லாயிரக்கணக்கானோருக்கு செலுத்திப்பார்க்கும் சோதனையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இறங்கி இருக்கும் வேளையில், அரசாங்கங்களும், கம்பெனிகளும் தடுப்பூசி உற்பத்தியை அளவிட தொடங்கி விட்டன. தடுப்பூசி தயாரிக்கும் ஓட்டத்தில், வெற்றி பெறக்கூடும் என்று எதிர்பார்க்கிற தடுப்பூசியை பெருமளவில் அவை இலக்காக கொண்டுள்ளன.

அதே நேரத்தில் அவர்களின் தேர்வு தோல்வியுற்றால், அவர்கள் பெரும் இழப்பையும் சந்தித்ததாக வேண்டும். அதே நேரத்தில் அதிர்ஷ்டவசமாக வெற்றி பெற்று விட்டாலோ, தடுப்பூசி வெகுஜன பயன்பாட்டுக்கு சில மாதங்களிலேயே வர வேகம் பிடிக்கும். அந்த நாளைத்தான் உலகம் எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறது.