100 ஆண்டுகள் பழமையான மரம் கண்டுபிடிப்பு

செவ்வாய் ஜூலை 07, 2020

அல் அய்ன் பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் கண்டுபிடிக்கப்பட்டது. ஓமன் நாட்டின் எல்லையையொட்டியுள்ள அல் அய்ன் பகுதியில் மலகத் என்ற இடத்தில் அல் சார என்ற 100 ஆண்டுகள் பழமையான மரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மரம் பாறைகளுக்கு இடையே வளர்ந்துள்ளது. பொதுவாக இந்த வகை மரம் ராசல் கைமா பகுதியில் மட்டுமே வளரக் கூடியது. அல் அய்ன் பகுதியில் வளர்ந்துள்ள இந்த மரம் குறித்த தகவல் நீண்ட காலமாக தெரியாமல் இருந்துள்ளது.

 100 ஆண்டு பழமையான மரம்

 

இந்த மரத்தின் இலைகளை பொதுமக்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து மருத்துவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தியுள்ளனர். இத்தகவலை சுற்றுச்சூழல் ஆய்வு மற்றும் வன மேம்பாட்டு ஏஜென்சி 2003-ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அபுதாபி சுற்றுச்சூழல் ஏஜென்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் ஷேக்கா சலீம் அல் தாகிரி கூறியதாவது:-

இந்த மரத்தின் எண்ணிக்கையை எவ்வாறு அதிகரிக்க முடியும் என்பது குறித்து பல்கலைக்கழகங்களில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் வெற்றி கிடைக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் இந்த மரங்களை வளர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும். இந்த மரத்தில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பூக்கள் பூக்கும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் காய்கள் காய்க்கும்.

அமீரகம் தவிர ஆப்பிரிக்க நாடுகள், எகிப்து, ஏமன், ஜோர்டான், பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த மரம் வளரக்கூடியது. இதனை எகிப்து நாட்டு மக்கள் புனிதமாக கருதி வந்துள்ளது வரலாற்று ஆய்வுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் மிகவும் சிறிய அளவிலேயே இந்த மரங்கள் இருந்துள்ளன. அமீரகத்தில் இந்த மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.