111-வது வயதிலும் ஜனநாயக கடமையாற்றிய பாட்டி!

சனி பெப்ரவரி 08, 2020

டெல்லி சட்டசபை தேர்தலில் 111 வயது நிரம்பிய பாட்டி ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயகக்கடமையான வாக்கை பதிவு செய்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

70 தொகுதிகளை கொண்ட தலைநகர் டெல்லிக்கான சட்டசபைத்தேர்தல் எந்த வித அசம்பாவிதமும் இல்லாமல் சுமூகமாக நிறைவடைந்தது. 

இந்த தேர்தலில் மொத்தம் 57.06 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவிய டெல்லி தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 11-ம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது. 

இதற்கிடையில், இன்று நடைபெற்ற வாக்கு பதிவின் போது அதிக அளவிலான பொதுமக்கள் காலை முதலே தங்கள் வாக்குச்சாவடிக்கு வந்து ஜனநாயகக்கடமையை ஆற்றினர்.

இந்நிலையில், 111 வயது நிரம்பிய பாட்டி ஒருவர் வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயகக்கடமையான வாக்கை பதிவு செய்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. 

களிடரா மண்டல் என்ற 111 வயது நிரம்பிய பாட்டி டெல்லி சித்தரஞ்சன் பூங்கா பகுதியில் வைக்கப்படிருந்த வாக்குச்சாவடிக்கு தனது குடும்ப உறுப்பினரின் உதவியுடன் வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

வாக்கை பதிவு செய்த பின் வாக்குச்சாவடிக்கு வெளியே நின்று கொண்டிருந்த செய்தியாளர்களிடம் சிறிது நேரம் பேசிய களிடரா மண்டல், ''நான் எத்தனை தேர்தல்களில் ஓட்டுபோட்டேன் என எனக்கு நியாபகம் இல்லை. இந்த தேர்தலில் எனது வாக்கை பதிவு செய்த்து எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. 

ஒரு பொறுப்புள்ள குடிமகனாக நாம் அனைவரும் ஓட்டுப்போட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’' என அவர் தெரிவித்தார்.