13ம் நூற்றாண்டை சேர்ந்த இரு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!!

திங்கள் செப்டம்பர் 07, 2020

சிவகங்கை அருகே 13ம் நூற்றாண்டை சேர்ந்த இரு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை அருகே கோமாளிபட்டியில் உள்ளூர் படையை பற்றிய குறிப்புகளுடன் கூடிய இரண்டு ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இது குறித்து சக்கந்தி மலைராஜன், தொல்லியல் குழுமத்தை சேர்ந்த ரமேஷ், விக்னேஷ்வரன்,சரவணமணியன் ஆகியோர் கூறியதாவது: ஆசிரியம் என்றால் அடைக்கலம் தருதல்,பாதுகாப்பு தருதல் என்று பொருள்.  

ஆசிரியம் என்ற சொல்லுடன் கூடிய கல்வெட்டுகள் தமிழகத்தில் புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில்  அதிகம் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சோழர், பாண்டியர்களின் வலிமையான ஆட்சிக்கு பிறகு மதுரை சுல்தான்கள் போன்றவர்களின் நிலையற்ற ஆட்சியில் நாட்டு மக்களின் உடைமைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. வணிகர்களும்  பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தனர்.

எனவே, மக்களுக்கான காவல் தரும் உள்ளூர் படை முறை 13ம் நூற்றாண்டில் இருந்து 16ம் நூற்றாண்டு வரை இருந்ததற்கான  சான்றுகள் கிடைத்துள்ளன.

பாதுகாப்பு தருபவர்களுக்கு பாதுகாப்பு கோருபவர்கள் சில உரிமைகள் அல்லது வருவாய்களை  ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். தற்போது கிடைத்திருக்கும் இந்த இரு கல்வெட்டுகளுள் ஒன்று 13ம் நூற்றாண்டின் முற்பகுதியை சேர்ந்தது. மற்றொன்று 13ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குலசேகர பாண்டியனின் தகவல்களுடன்  கிடைத்துள்ளது.

வில் அம்பு சின்னம் பொறிக்கப்பட்ட கல்வெட்டில், கேழாநிலை (தற்போதைய கீழாநிலைக்கோட்டையாக இருக்கலாம்) என்ற ஊர்  நிலைப்படை தங்குமிடமாக இருந்துள்ளது.

இரண்டாவது கல்வெட்டில் குலசேகர பாண்டியனின் எட்டாவது  ஆட்சியாண்டில் சித்திரை மாதம் கனவழி நாட்டு படை ஆசிரியம் கொடுத்த செய்தி இடம்பெற்றுள்ளது.