14 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா!

January 06, 2017

14-வது சென்னை சர்வதேச திரைபப்ட விழா அதிக ஆரவாரம் இல்லாமல் நேற்று (5.01.2017) தொடங்கியது. ஜனவரி 12-ம் திகதிவரை எட்டு நாட்கள் நடைபெற உள்ள இத்திரைபப்ட விழாவில் கான் படவிழா உட்பட உலகின் புகழ்பெற்ற சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளையும் பரிசுகளையும் அள்ளிய 45 நாடுகளைச் சேர்ந்த 150 உலகத் திரைப்படங்கள் திரையிடப்படும்.

 இவ்விழா தமிழக அரசின் ஆதரவுடன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் மற்றும் திரையுலகத் தொழிற்சங்கங்களுடன் ஒருங்கிணைந்து கடந்த 13 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறது இன்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன்.

திரை ஆர்வலர்களின் ஒரே வருத்தம் இந்த முறை உட்லேண்ட்ஸ் திரையரங்க வளாகம் இம்முறை இடம்பெறவில்லை. மாறாக ஃபோரம் மாலில் உள்ள பெலாஸோ, சிட்டி செண்டர் வளாகத்தில் உள்ள இரண்டு ஐநாக்ஸ் திரையரங்குங்கள், கேசினோ திரையரங்கம், ரஷ்ய கலாச்சார மையத்தில் உள்ள திரையரங்கம், ஆர்.கே.வி. ஸ்டூடியோ திரையரங்கம் ஆகியவற்றில் திரையிடல்கள் நடைபெற இருக்கின்றன.

ஒவ்வொரு திரையரங்குகளிலும் காலை 9.30 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணிவரை தினமும் ஐந்து காட்சிகள் இடம்பெறும் 14-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா குறித்து திரைப்பட விழாவின் இயக்குநர் ஏ.தங்கராஜிடம் மீடியாவிடம் கூறியவற்றிலிருந்து:

‘உலக சினிமா அரங்கில் மாபெரும் திரை ஆளுமை என்று கொண்டாடப்பட்டு வரும் இயக்குநர் மார்டின் ஸ்கார்ஸஸி தேர்வு செய்திருக்கும் ஆறு போலந்து நாட்டுத் திரைப்படங்களை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள். அந்தப் படங்களின் தொகுப்பில் எதையும் ரசிகர்கள் தவறவிட வேண்டாம். அதேபோல நாடுகளின் வரிசையில் ஹாங்காங்கில் செயல்பட்டுவரும் ஏசியன் பிலிம் அவார்ட்ஸ் அகாடமி 5 ஆசிய நாடுகளிலிருந்து தலைசிறந்த 8 படங்களைத் தேர்வு செய்து அளித்திருக்கிறது.

சென்னைத் திரைப்பட விழாவில் ஒவ்வொரு ஆண்டும் பிரெஞ்சுப் படங்களுக்கு இருக்கும் வரவேற்பே தனி. இந்த ஆண்டு இன்றைய நவீன யுகத்தின் திறமைகளாகப் பளிச்சிடும் ஆறு பிரெஞ்சு இயக்குநர்களின் படங்களை பிரெஞ்சுத் தூதரகமே தேர்வு செய்து அளித்திருக்கிறது. அதேபோல் ஜெர்மனியின் புதிய திறமைகளாகப் பளிச்சிடும் இயக்குநர்களின் 8 படங்களைச் சென்னையில் செயல்பட்டுவரும் கலாச்சார தூதரகமான மேக்ஸ்முல்லர் பவன் தேர்வு செய்து அளித்திருக்கிறது.

கடந்த ஆண்டு முதல் உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவரும் 'கட்' என்ற ஜெர்மன் படத்தை அப்போதே திரையிட முயன்றோம். அது இந்த ஆண்டு சாத்தியமாகியிருக்கிறது. இந்த நாடுகளோடு நார்வேயிலிருந்து மூன்று, லக்ஸம்பர்க்கிலிருந்து ஆறு, பிரேசிலிலிருந்து ஐந்து, இரானிலிருந்து பத்து என எதைப் பார்ப்பது எதை விடுப்பது என்ற இன்ப அவஸ்தையில் ரசிகர்கள் திக்குமுக்காடப் போவது உறுதி’ என்கிறார்.

திரைப்பட விழா குறித்த கூடுதல் தகவல்களைப் பெற 9840151956 எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

செய்திகள்