15-ம் திகதி புதிய கட்சியை அறிவிக்கிறார் டி.டி.வி தினகரன்

Sunday March 11, 2018

குக்கர் சின்னம் மற்றும் தான் கேட்ட கட்சியின் பெயரை ஒதுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மதுரையில் வரும் 15-ம் திகதி புதிய கட்சியின் பெயரை டி.டி.வி தினகரன் அறிவிக்க உள்ளார். 

டி.டி.வி.தினகரனுக்கு பிர‌ஷர் குக்கர் சின்னத்தையும் அவர் கோரும் கட்சியின் பெயரையும் ஒதுக்குமாறு தேர்தல் கமி‌ஷனுக்கு டெல்லி உயர் நீதிமன்றம்  நேற்று முன்தினம் உத்தரவிட்டு இருந்தது. இதனை அடுத்து, தனது ஆதரவாளர்களுடன் டி.டி.வி தினகரன் நேற்று ஆலோசனை நடத்தினார். 

குக்கர் சின்னம் கிடைத்துள்ள நிலையில் கட்சியின் பெயரை முடிவு செய்வது குறித்தும், கட்சியின் கொடி எந்த கலரில் அமைய வேண்டும் என்பது குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார்.

டெல்லி உயர் நீதிமன்றில்  ஏற்கனவே கட்சியின் பெயராக, அனைத்திந்திய அம்மா அண்ணா தி.மு.க., எம்.ஜி.ஆர். அம்மா தி.மு.க., எம்.ஜி.ஆர். அம்மா திராவிடர் கழகம் ஆகிய 3 பெயரை குறிப்பிட்டு ஒரு பெயரை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் கூறி இருந்தார்.

இதில் எந்த பெயரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்தார். கூட்டத்தில் ஒவ்வொரு நிர்வாகிகளும் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். இதை கவனமுடன் டி.டி.வி. தினகரன் கேட்டு கொண்டார்.

இந்நிலையில், வரும் 15-ம் திகதி மதுரையில் புதிய கட்சியின் பெயரை டி.டி.வி தினகரன் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சிக்கான கொடியையும் அவர் அறிமுகப்படுத்தி வைக்க உள்ளார்.