15 நாட்டு தூதர்கள் காஷ்மீரில் ஆய்வு!

திங்கள் சனவரி 13, 2020

அமெரிக்கா உட்பட 15 நாடுகளின் தூதர்கள் அண்மையில் காஷ்மீரில் ஆய்வு செய்தனர். இது முக்கிய நடவடிக்கை என்று அமெரிக்கா பாராட்டி உள்ளது. அதேநேரம் அங்கு விரைவில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5-ம் திகதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. வன்முறை, உயிரிழப்புகளை தடுக்க அங்கு கூடுதல் படைகள் குவிக்கப்பட்டன. செல்போன், இணைய சேவைகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருவதால் படைகள் குறைக்கப்பட்டுள்ளன. செல்போன் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. காஷ்மீரின் உண்மை நிலையை அறிய அமெரிக்கா, நார்வே, தென்கொரியா, வங்கதேசம், வியட்நாம், பிலிப்பைன்ஸ், பெரு உட்பட 15 நாடுகளை சேர்ந்த தூதர்கள் கடந்த 9, 10-ம் தேதிகளில் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து அமெரிக்க அரசின் தெற்கு, மத்திய ஆசியாவுக்கான துணை செயலாளர் அலிஸ் வெல்ஸ் நேற்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

அமெரிக்கா உட்பட 15 நாடுகளின் தூதர்கள் காஷ்மீரில் ஆய்வு செய்தது மிக முக்கிய நடவடிக்கை. அதேநேரம் அங்கு அரசியல் தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டிருப்பது, இணைய சேவை துண்டிக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. காஷ்மீரில் விரைவில் இயல்பு நிலை திரும்ப விரும்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வரும் 15-ம் திகதி அலிஸ் வெல்ஸ் இந்தியா வருகிறார். அப்போது இருநாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட உள்ளது.