18 மாதங்­களில் தேசிய அர­சாங்­கத்தில் எவ்­வாறு செயற்­ப­ட­வேண்டும் !

செவ்வாய் ஏப்ரல் 17, 2018

ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி தேசிய அர­சாங்­கத்தில் நீடிப்பதா, இல்­லையா? என்­பது குறித்து ஆரா­யவும்  அது தொ­டர்­பான பரிந்­து­ரை­களை முன்­வைப்­ப­தற்கும்   கலா­நிதி  சரத் அமு­னு­கம  தலை­மையில்   ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு அடுத்த 18 மாதங்­களில் தேசிய அர­சாங்­கத்தில் எவ்­வாறு செயற்­ப­ட­வேண்டும் என்­பது குறித்து ஒரு வரைபை தயா­ரித்­தி­ருக்­கின்­றது. 

அந்த வரைபு குறித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாடு திரும்­பி­யதும் ஆரா­யப்­ப­ட­வுள்­ள­துடன் அத­ன­டிப்­ப­டையில் அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வுள்­ளன. 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன   பிரிட்­ட­னுக்­கான உத்­தி­யோ­கப்­பூர்வ விஜ­யத்தை மேற்­கொள்­வ­தற்கு முன்­ப­தாக    கலா­நிதி சரத் அமு­னு­கம தலை­மையில்   தேசிய அர­சாங்­கத்தில்  சுதந்­தி­ரக்­கட்சி நீடிப்­பதா இல்லை என்­பது குறித்து  ஆராய  குழு­வொன்றை நிய­மித்தார். 

அந்­தக்­கு­ழுவில்  அமைச்­சர்­க­ளான சரத் அமு­னு­கம,  மஹிந்த சம­ர­சிங்க,  துமிந்த திஸா­நா­யக்க, மற்றும் ரஞ்சித் சியம்­ப­லாப்­பிட்­டிய ஆகி­யோரும் இடம்­பெ­று­கின்­றனர். இந்­நி­லையில் இந்தக் குழு­வா­னது கடந்த சில தினங்­க­ளாக கூடி ஆராய்ந்து ஒரு வரைபை தயா­ரித்­தி­ருக்­கின்­றது. 

அதா­வது நல்­லாட்சி அர­சாங்­கத்தில் எஞ்­சி­யுள்ள காலப்­ப­கு­தியில் எவ்­வாறு தேசிய அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்து செல்­வது,  எவ்­வா­றான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­பது என்­பது தொடர்­பான ஒரு வரைபே இந்­தக்­கு­ழு­வினால் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இது­தொ­டர்பில் ஜனா­தி­ப­தி­மைத்­தி­ரி­பால சிறி­சேன நாடு திரும்­பி­யதும் சுதந்­தி­ரக்­கட்சி ஆரா­ய­வுள்­ள­துடன் அத­னை­ய­டுத்து அது குறித்து ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 

இவ்­வாறு   இந்த வரை­புக்கு  ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் இணக்கும்  பட்­சத்தில் சுதந்­தி­ரக்­கட்­சியும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் இணைந்த தேசிய அர­சாங்கம்   நீடிக்கும்.   கடந்த  13 ஆம்­தி­கதி  புதிய அமைச்­ச­ர­வையை நிய­மிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்­த­போ­திலும் இறு­திக்­கட்­டத்தில் அந்த நட­வ­டிக்கை பிற்­போ­டப்­பட்­டது. 

அதற்குப் பதி­லாக   அமைச்சுப் பத­வி­களை   இரா­ஜி­னாமா செய்த சுதந்­தி­ரக்­கட்­சியின் ஆறு அமைச்­ச­ரவை அமைச்­சுக்­களின் பொறுப்­புக்கள்   ஏற்­க­னவே அமைச்சுப் பத­வி­களை வகிக்­கின்ற நான்­கு­பே­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன. கலா­நிதி சரத் அமு­னு­கம,  ரஞ்சித் சிய­ப­லாப்­பிட்­டிய  பைசர் முஸ்­தபா, மற்றும் மலிக் சம­ர­விக்­கி­ரம ஆகி­யோ­ரி­டமே குறித்த பொறுப்­புக்கள் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன. 

ஜனா­தி­பதி  நாடு திரும்பி  புதிய அமைச்­ச­ரவை அமைக்­கப்­ப­டும்­வரை  இவர்கள்  நால்­வரும் தற்­கா­லி­க­மாக இந்தப் பத­வி­களை வகிக்­கின்­றனர். 

அந்­த­வ­கையில் தற்­போது சுதந்­தி­ரக்­கட்சி  அடுத்­து­வரும்  காலப்­ப­கு­தியில்  எவ்­வாறு செயற்­ப­டு­வது என்­பது குறித்து வரைபை தயா­ரித்­துள்­ளதால்  அடுத்த கட்­டத்தில்   என்ன நடக்­கப்­போ­கின்­றது என்­பதை ஜனா­தி­பதி நாடு­தி­ரும்­பி­யதும்    தீர்­மா­னிக்­க­வுள்­ளனர்   கடந்த 4 ஆம்­தி­கதி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்­பின்­போது சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின்  16 எம்.பி.க்கள் பிர­த­ம­ருக்கு எதி­ராக வாக்­க­ளித்­தனர். இத­னை­ய­டுத்து தேசிய அர­சாங்­கத்தில் மேலும் நெருக்­கடி நிலைமை ஏற்­பட்­டது. 

குறித்த 16 பேரும் அர­சாங்­கத்தின் பொறுப்­புக்­க­ளி­லி­ருந்து விலகவேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சி வலியுறுத்தியது.  இந்நிலையில்  இந்த 16 பேரும் தமது பதவிகளை கடந்த  வியாழக்கிழமை இரவு இராஜினாமா செய்தனர்.    இந்நிலையில் தற்போது  புதிய அமைச்சரவை உருவாக்கப்படவேண்டியுள்ளது.  இந்த 16 எம்.பி.க்களில் ஆறு பேர் அமைச்சரவை  அமைச்சுக்களை வகித்த நிலையில் அவர்களின் பொறுப்புக்கள்  ஏற்கனவே அமைச்சர்களாக இருக்கின்ற நான்குபேரிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.