18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி! ஜோ பைடன்-

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
அமெரிக்காவில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வருகின்ற 19-ம் திகதி முதல் தொடங்கும் என்று அதி.பர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அதேபோல் தான் பதவியேற்ற முதல் 100 நாட்களுக்குள் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று பைடன் அறிவித்திருந்தார்.
ஆனால் இந்த இலக்கை 58 நாட்களிலேயே நிறைவு செய்த நிலையில் தற்போது 20 கோடி பேர் என்ற இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
ஏற்கனவே திட்டமிட்டிருந்த மே முதல் திகதிக்கு, இரு வாரங்கள் முன்னதாகவே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனாவின் புதிய வகைகளுடன் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வயது வந்த அனைவரும் முழு அளவில் தடுப்பூசிகளை எடுத்து கொள்வதற்கு பல மாதங்கள் எடுத்துக் கொள்ளும்.
அதனால் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் மற்றும் முக கவசங்களை அணிந்து கொள்ளுதல் வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.