2ஜி அலைக்கற்றை முறைகேடு; கனிமொழியின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது

புதன் நவம்பர் 04, 2015

சாட்சிகள் விசாரணை ஏறக்குறைய முடிந்துவிட்டது. கனிமொழி குற்றவாளியா இல்லையா என்பதை விசாரணை நீதிமன்றம் இனி முடிவு செய்யும்’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

2ஜி அலைக்கற்றை முறைகேடு விவகாரத்தில் தனக்கு குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்ற கனிமொழியின் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது. சுமார் இரண்டரை ஆண்டுகாலத்துக்குப் பிறகு இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்த விசாரணை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, ஏ.கே.சிக்ரி, மற்றும் ரோஹிண்டன் நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு வந்தது.

 

அப்போது, நீதிபதிகள், சாட்சி விசாரணைகள் ஏறக்குறைய முடிவுக்கு வந்தது, கனிமொழி குற்றவாளியா இல்லையா என்பதை இனி விசாரணை நீதிமன்றம் முடிவு செய்யும் என்றனர். “விசாரணை ஏறக்குறைய முடிந்து விட்டது. 2ஜி சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் சாட்சிகள் விசாரணை நிறைவடைந்தது என்று சமர்ப்பித்துள்ளார். இறுதி வாதங்களும் முடிவுக்கு வந்தன. இந்த நிலையில் இம்மனுவை (கனிமொழியின்) நாங்கள் ஊக்குவிக்க விரும்பவில்லை” என்று தலைமை நீதிபதி தத்து கூறினார்.

 

ஆனால், மூத்த வழக்கறிஞர் அமரேந்திர சரண், கனிமொழியின் மனு இரண்டரை ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தினால் நிலுவையில் வைக்கப்பட்டது என்று வருத்தம் தெரிவித்தார். தனது கட்சிக்காரர் (கனிமொழி) மீதான சந்தேகம் ஊர்ஜிதமாகாமல் கிரிமினல் குற்றம் சுமத்தப்பட முடியாது. இந்த விவகாரத்தில் கனிமொழிக்கு எதிராக இம்மியளவுக்குக் கூட சந்தேகம் இல்லை என்றார் அவர்.

 

2ஜி முறைகேட்டில் தன் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்த்து கனிமொழி ஜூலை 2013-ல் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குநர்கள் குழுவில் 2007 ஜூன் 6 முதல் ஜூன் 20ம் தேதி வரை இரண்டு வார காலங்களுக்கு மட்டுமே தான் இருந்ததாக மனுவில் கனிமொழி குறிப்பிட்டிருந்தார். மேலும் தான் எந்தக் காசோலையிலும் கையெழுத்திடவில்லை என்றும், தான் எந்தவித பண ஆதாயத்தையும் பெறவில்லை என்றும் தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், தான் 20% பங்குகளை மட்டுமே வைத்திருந்ததாகவும், எனவே நிறுவனத்தின் மீது எழும் நிதிமுறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு பங்குதாரரை தொடர்புபடுத்த முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார். டிசம்பர் 2008 முதல் ஆகஸ்ட் 2009 வரை நடைபெற்றுள்ள நிதிநடவடிக்கைகள் குறித்தே தற்போது விவகாரம் எழுந்துள்ளது. ஆனால் இந்தக் காலக்கட்டத்தில் தான் ராஜினாமா செய்து 18 மாதங்களுக்கு மேல் ஆகியிருந்தது என்றும் அவர் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.