20 ஆயிரம் பேர் பங்கேற்ற மராத்தான் பந்தயம்

January 08, 2017

சென்னையில் இன்று முழு மராத்தான், அரை மராத்தான் மற்றும் 10 கிலோ மீட்டர் ஆகிய 3 பிரிவுகளிலும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் விப்ரோ நிறுவன ஆதரவுடன் ஆண்டுதோறும் சென்னை மராத்தான் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 11-ந்திகதி சென்னை மராத்தான் போட்டி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி மராத்தான் ஓட்டம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் விப்ரோ - சென்னை மராத்தான் பந்தயம் இன்று நடத்தப்பட்டது. முழு மராத்தான் (42.2 கிலோ மீட்டர்), அரை மராத்தான் (21.1 கி.மீ) மற்றும் 10 கிலோ மீட்டர் தூரம் ஓட்டம் ஆகிய 3 பிரிவுகளில் பந்தயம் நடந்தது. முழு மராத்தான் அதிகாலை 4 மணிக்கும், அரை மராத்தான் அதிகாலை 5 மணிக்கும் மத்திய கைலாஷ் அருகே உள்ள கஸ்துர்பா நகர் எம்.ஆர்.டி.எஸ். ஸ்டேசன் பகுதியில் இருந்து தொடங்கியது.

10 கிலோ மீட்டர் ஓட்டம் நேப்பியர் பாலத்தில் இருந்து காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த 3 பந்தயங்களும் தரமணி சென்ட்ரல் பால் டெக்னிக் கல்லூரி மைதானத்தில் நிறைவடைந்தன. முழு மராத்தான், அரை மராத்தான் 10 கிலோ மீட்டர் ஆகிய 3 பிரிவுகளிலும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.17.20 லட்சமாகும். முழு மராத்தான் ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் முதல் 5 இடங்களை பிடித்த வர்களுக்கு முறையே ரூ.1.25 லட்சம், ரூ.80 ஆயிரம், ரூ.50 ஆயிரம், ரூ.35 ஆயிரம், ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது.

அரை மராத்தானில் முதல் 5 இடங்களை பிடித்த ஆண்கள், பெண்கள் முறையே ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம், ரூ.35 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.20 ஆயிரமும், 10 கிலோ மீட்டர் பிரிவில் முறையே ரூ.35 ஆயிரம், ரூ.30 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது.

இதேபோல் முதியோர் பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு ரூ.40 ஆயிரம், ரூ.30 ஆயிரம், ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது.

செய்திகள்