20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும்!

Thursday October 25, 2018

ண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த நீதியரசி இந்திரா பானர்ஜி அவர்கள், சட்டப்பேரவைத் தலைவர் எடுத்த முடிவு செல்லும் என்று தீர்ப்பு எழுதி இருந்தார்கள். அதே அமர்வில் இருந்த நீதியரசர் சுந்தர் அவர்கள் செல்லாது என்று தெரிவித்து இருந்தார்.

 

எனவே, மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதியரசர் சத்தியநாராயணா அவர்கள் இன்று அளித்துள்ள தீர்ப்பில், நீதியரசி இந்திரா பானர்ஜி அவர்களுடைய தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, சட்டப்பேரவைத் தலைவர் 18 உறுப்பினர்களை நீக்கியது செல்லும் என்று தீர்ப்பு அளித்துள்ளார்.

 

இதை எதிர்த்து அவர்கள் மேல் முறையீடு செய்கிறார்களா? இல்லையா? என்பதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை; அக்கறையும் இல்லை.

 

ஆனால், திருப்பரங்குன்றம், திருவாரூர் உட்பட 20 தொகுதிகள் காலியாக இருக்கின்றன.  தொகுதிக்கான மக்கள் பிரதிநிதிகள் இல்லை என்கிற நிலையில், அங்கே எந்தவிதமான வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. எனவே, அந்தத் தொகுதிகளுக்கு உடனடியாக இடைத்தேர்தல் நடத்த வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்ந்து நடத்தலாம் என்பதை ஏற்க முடியாது.

 

எனவே, இடைத்தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, தலைமைத் தேர்தல் ஆணையரை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கேட்டுக் கொள்கின்றது.