2009ல் நடந்தது என்ன? அரசியற் பொறுப்பாளர் தயாமோகன் பேட்டி

திங்கள் டிசம்பர் 28, 2015

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கிய தளபதியாக இருந்த தயாமோகன், இயக்கத்தில் 20ஆண்டு காலம் பணியாற்றியவர். கருணா, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றபோது கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளராகப் பணியாற்றியவர் தயாமோகன். 2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் காட்டுக்குள் இருந்து ஜூன் மாதம் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்ந்து வருகிறார். அவர் இன்று ( 26.12.2015 ) ஸ்கைப் வழியாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி:

2009ல் என்னதான் நடந்தது? பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து இந்த போருக்கு வித்திட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. தவிர, அந்தக் காலகட்டத்தில் நீங்கள் களத்தில் இருந்துள்ளீர்கள். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. உண்மையில் நடந்தது என்ன?

மன்னார் மாவட்டம் மறைமாவட்ட ஆயர் ஜோசப் சொல்லியிருக்கிறார் ஒரு லட்சத்து ஐம்பத்து ஆறு ஆயிரம் மக்கள் அங்கு பதிவில் இருந்து இப்போது இல்லாமல் இருக்கி றார்கள் என்று. அப்படிப் பார்க்கும்போது 1 லட்சத்து 56 ஆயிரம் பேர் கடைசி நேரங்களில் அந்த போரில் இல்லாமல் போயிருக்கிறார்கள் என்பதுதான் இந்த கேள்விக்கான பதில்.

இறுதிப்போரில் பல நாடுகள் இலங்கை இராணுவத்திற்கு உதவி செய்து, இந்தப் போரை வெற்றி கொள்ள முயன்றது உண்மை. இதில் குறிப்பாக இந்தியாவிற்கு எதிராக இருக்கின்ற சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள், அதே நேரம் இந்தியா. எதிரெதிர் நாடாக இருந்த அத்தனை நாடுகளும் தமிழர்களின் விடுதலை போராட்டத்தை முற்றும் முழுதாக முடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு, அதன்படியே இந்தப் போரை முடித்து விட்டார்கள்.

கடந்த காலங்களில் வல்லரசு நாடுகளை எதிர்த்து புலிகள் இயக்கம் கடுமையாக எதிர்த்து வெற்றியும் பெற்றிருக்கின்றன. ஆனால், 2009ல் இறுதிப்போர் என்கிற அளவிற்கு இந்தச் சூழ்நிலை செல்ல காரணமென்ன?

இந்திய இராணுவம் தொழில்நுட்ப ரீதியாக இலங்கைக்கு உதவி அளித்தது. இந்திய இராணுவம் நேரடியாகவே களத்தில் நின்றது. வவுனியாவில் விடுதலைப் புலிகளின் ராடார் அளிக்கப்பட்ட போது, இந்திய சிப்பாய் காயமடைந்திருப்பதை அறிவீர்கள்.

தோல்வி என்று வந்தால் அது நம்மில் இருக்கும் ஒருவர் காட்டிக் கொடுத்தால் உண்டு என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முன்னமே கூறியுள்ளார். அந்த வகையில், இந்த போராட்டத்தின் தோல்விக்கு கருணா ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இது உண்மைதானா?

வீரபாண்டிய கட்டப்பொம்மனுக்கு எட்டப்பன் போல பிரபாகரனுக்கு ஒரு கருணா. இது வரலாற்றில் இருந்து அழிக்கப்பட முடியாத ஒன்று. ஆனால் வரலாறு இப்போது திரிக்கப்படுகின்றது. இந்த குறுகிய காலத்திலேயே திரிக்கப்படுகின்ற நிலை வருகின்ற போது, நாங்கள் அதை வெளியே வந்து சொல்ல வேண்டிய கடமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.

இலங்கையில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு இன்று ஆறு வருடங்கள் நெருங்குகின்ற போது, அங்கு பத்து வயதாக இருந்த ஒரு பிள்ளைக்கு இன்று பதினாறு வயதாகிறது. இப்போது அவர்கள் வரலாறு தெரிய வேண்டியவர்கள். இந்த நேரத்தில் பிழையான வரலாறும் பிழையான தகவல்களும் கிடைத்து உண்மையான வரலாறு மறைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பேசுகிறேன்.

ஏனையவர்கள் காட்டிக் கொடுப்பவர்கள் இருந்தார்கள். இதில் முக்கியமானவர் கருணா. நீண்டகாலமாக எங்களுடைய போராட்டத்தில் படைத்தளபதியாக இருந்து வழிநடத்தியவர். எங்களுடைய இராணுவ, தொழில்நுட்ப, படைபல இரகசியங்களை கணிசமாக, 90 விகிதம் தெரிந்த ஒருவர் எதிரிப்படைக்கு தகவல் கொடுக்கின்ற போது எந்த அளவு பாதிப்பு ஏற்படும் என்பது சாதாரண மக்கள் கூட புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் கருணாவின் காட்டிக்கொடுப்பு என்பது இந்தப் போராட்டத்தில் மிகப்பெரிய பங்களிப்பை செய்தது.

இறுதிக்கட்ட போருக்கு முன்பாகவே கிழக்கு மாகாணத்தில் இருந்த போராளிகளை பிரபாகரன் பாதுகாப்பிற்கும் மேற்கு மாகாணத்தில் நியமிக்கப்பட்டதை, கருணா மீண்டும் கிழக்கு மாகாணத்திற்கு அழைத்ததாகவும், அது எப்படி வரமுடியும் என்று கேட்டபோது, இலங்கை இராணுவத்தின் வழியாக வாருங்கள் என்று கருணா சொன்னதாக கூறப்படுகிறது. அது குறித்து உங்கள் கருத்து என்ன?

நான் உட்பட 600 படை அணி வீரர்களை கருணா ஏற்கனவே தலைவரின் பாதுகாப்புக்காக வடக்கிற்கு அனுப்பி இருந்தார். கருணாவுக்கும் தலைவருக்கும் நடந்த சொற்போரின் போது நான் உட்பட கிழக்கு மாகாண 600 படை அணியினரும் தலைவர் உடன் தான் நிற்கிறோம். கருணாவுக்கு அளித்த தகவலையும், கருணா தனக்கு அளித்த மறுமொழியையும் தலைவர் எங்களிடம் காண்பித்தார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் கருணா நேரில் வராமல், எங்கே தன்னைக் காட்டி கொடுத்து விடுவார்களோ என்று அச்சத்தின் பேரில் தன் சொந்த பந்தங்களை  போராளிகளைக் கொல்லத் தொடங்குகிறார். இதற்குப் பிறகுதான் தலைவர் சொன்னார்.. இனி விட்டால் கருணா சொந்தப் படை அணியினரைக் கொன்று சிதைத்து விடுவார். எனவே கிழக்கில் சென்று புலிகள் இயக்கத்தை மீட்டு எடுங்கள் என்று கட்டளை இட்டார்.

இப்படி நடந்து கொண்டு இருக்கக் கூடிய நிலையில்தான் கருணா எம்மைத் தொடர்பு கொண்டு, 600 படை வீரர்களோடு வடக்கில் அங்குள்ளவர்களை அடித்து விட்டாவது கிழக்குக்கு வந்து விடுங்கள் என்று சொல்கிறார். நாங்கள் சொன்னோம் அது எப்படி முடியும் என்று. அதற்குக் கருணா சொன்னார்.

ஒன்றும் இல்லை நீங்கள் அங்கிருந்து வந்து இலங்கை இராணுவத்திடம் வந்து விடுங்கள் அவர்கள் உங்களைப் பத்திரமாக மீட்டுக் கப்பல் மூலமாக அழைத்து வந்து எம்மிடம் ஒப்படைத்து விடுவார்கள் என்று. எங்களுக்கு அதிர்ச்சியாகிவிட்டது.

இலங்கை இராணுவம் வழியாக வாருங்கள் என்று அவர் சொன்னதில் இருந்து கருணா இலங்கை இராணுவத்தோடு கை கோத்து விட்டார்..நிலைமை எல்லை மீறிப் போய் விட்டது என்பதை அறிந்து நடந்தவற்றை எல்லாம், கருணா பேசியதை எல்லாம் தலைவரிடம் காண்பித்தோம். கருணா பேசியதை நாங்கள் பதிவு செய்திருந்தோம். இதற்கு பிறகுதான் தலைவர் கிழக்கை மீட்டு எடுப்பதில் தீவிரம் காண்பித்தார். அப்போதும் அவர் சொன்னார். நீங்கள் துப்பாக்கியை நீட்டுவது உங்கள் உடன்பிறப்புகளுக்கு எதிராக. முடிந்தவரை துப்பாக்கிப் பயன்பாடு வேண்டாம். அவர்களை அச்சுறுத்தி கைப்பற்றுங்கள் என்றார். ஆனால்.. அந்தச் சண்டையில் கிழக்கு மாகாணத்தின் 23 புலிகள் இறந்து போனார்கள். அவர்களில் பொறுப்பாளர்கள் யாரும் இல்லை, அவர்கள் போராளிகள்தான் என்று உறுதியானால் அவர்களை மாவீரர்கள் பட்டியலில் சேருங்கள் என்று சொன்னார் எமது தலைவர் பிரபாகரன்.

காலச்சூழல் காரணமாகக் கருணாவின் பிடியில் சிக்கிய அவர்கள் நமது உடன்பிறப்புகள். எனவே அவர்களை மாவீரர்கள் பட்டியலில் சேருங்கள் என்று சொல்லி அவர்களைச் சேர்த்தார் தலைவர். கருணா பிரிவதாக அறிவித்த காலத்திற்கு ஓர் ஆண்டுக்கும் முன்னரே கருணா இலங்கை இராணுவத்தின் ஆளாக ஆகியிருந்து இருக்கிறார்.

இதுபற்றி என்னைப் போலவே நன்கு அறிந்த கருணாவுக்கு அடுத்த பொறுப்பில் இருந்த இன்னொரு தளபதியும் உயிரோடு இருக்கிறார். வேறு ஒரு நாட்டில் அவர் தற்போது இருக்கிறார். பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர் பெயரை நான் இப்போது குறிப்பிடவில்லை. அவரும் பாதுகாப்பாக அமர்ந்தபின் நாங்கள் இருவரும் கூட்டாகப் பேட்டி அளிப்போம்.

பிரபாகரனுக்கு அடுத்தகட்ட இடத்தில் இருந்த கருணா பிரபாகரனுக்கு எதிராகவே திரும்புவதற்கு என்ன காரணம்?

பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக எங்களுடைய அமைப்பு ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை கொண்டது. இந்த மூன்றும் இருப்பவர்கள்தான் போராளிகளாகவும், தளபதிகளாகவும் இருந்தார்கள். இதில் குறிப்பிட்ட காலத்திற்குள் கருணாவின் சில பிரச்சனைகள், போராளி, தளபதி என்பதையும் தாண்டி ஒரு தனிமனிதனுக்கு ஏற்படுகின்ற பிரச்சனை. இந்தப் பிரச்சனை தலைவருக்கு தெரியவந்தது.

ஒழுக்கத்தை மீறுபவர்களூக்கு ஆரம்பத்தில் பெரிய தண்டனை கொடுக்கப்பட்டது. அப்போது வளர்ச்சிபெற்ற இராணுவ காலம் என்பதால் சிறு சிறு தண்டனைகள் கொடுக்கப்பட் டன. இதுமாதிரியான ஒழுக்க மீறல்களூக்கு மிகப்பெரிய தண்டனை கொடுத்து வந்தவர்தான் கருணா.

ஆகவே, தான் செய்த செயல்களுக்கு தனக்கு அப்படி ஒரு தண்டனை வழங்கப்பட்டு விடுமோ என்கிற அச்சம் அவருக்கு இருந்தது. அதன் வெளிப்பாடுதான் ஏற்பட்ட முரண்பாடு. ஆனால், கருணாவுக்கு எந்த தண்டனையையும் வழங்கும் எண்ணம் தலைவர் பிரபாகரனுக்கு இல்லை. ஆனால், இது கருணாவுக்கு புரியவில்லை.

சமாதானத்திற்கு உடன்பட்டேன், பிரபாகரன் அதற்கு உடன்படவில்லை. அதனால் வெளியேறினேன். வெளியேறினாலும் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை என்று கருணா கூறியுள்ளாரே?

தன்னுடைய அரசியல் நலனுக்காக இப்படி உண்மைக்கு புறம்பாக சொல்லி வருகிறார் கருணா. காட்டிக் கொடுக்கவில்லை என்பது உண்மையல்ல. கருணா இலங்கை அரசாங்கத்திடம் எங்களது இராணுவ இரகசியங்களை சொல்லிய பின்னரும் கருணாவை துரோகி என்று தலைவர் ஒருபோதும் எங்கேயும் சொன்னதில்லை.

போர் யுத்தியில் ஏற்பட்ட குளறுபடிதான் விடுதலைப் புலிகளின் தோல்விக்கு காரணம். காட்டுப் பகுதிக்குள் வந்து போரிட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம், கடலை நோக்கிச் சென்றதால் தோல்வி பெற்றார் பிரபாகரன். கொரில்லா போர் முறையை கையாண்டிருந்தால் வெற்றி பெற்றிருப்பார் என்று கருணா சொல்லியிருக்கிறாரே?

புலிகள் இயக்கம் பல பெரிய சமர்களை வென்ற இயக்கம். ஒட்டு மொத்த உலக நாடுகளும் பொறாமைப்பட்டது. புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை அதன் போர் முறை என்பது மிகவும் நுட்பமானது. ஆட்கள் குறைவு ஆனால் செயல்படும் வேகமும், முறையும் பெருத்த சேதங்களை ஏற்படுத்த கூடியது. எமது தலைவரின் உக்திகளும் போர்த் தந்திர முறைகளும் எவராலும் கணிக்கப்பட முடியாதது.

தமிழர்கள் உதவியால் முப்படைகளையும் கொண்ட ஒரு இராணுவத்தை அமைத்து, தமிழீழத்திற்கான மிகப்பெரும் சமர்களைச் செய்த ஒரு தலைவர், மீண்டும் ஒரு கொரில்லா போருக்குள் செல்வது என்பது அந்தச் சூழலில் சாத்தியமா என்பது இராணுவ ரீதியாக ஆராய்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

எங்களின் மறைவிடங்கள் எல்லாம் காட்டிக் கொடுப்பவர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டன. குறிப்பாக கருணாவின் காட்டிக் கொடுப்புகள்தான் இந்த போராட்டத்திற்கு மிகப்பெரிய காட்டிக் கொடுப்பாக இருந்துவிட்டது.

இராணுவத்திற்கு எந்தெந்த வழியில் எல்லாம் பொருட்கள் வருகிறதோ அதையெல்லாம் கருணா காட்டிக் கொடுத்து விட்டார். வெடிமருந்து இல்லாமல் போய்விட்டதால் அவர்கள் இந்த போரில் வென்றார்கள். மேலும், சிறு படைகளை வைத்துக் கொண்டு எப்படி பெரு சமர்களை வெல்வது என்கிற விடுதலைப் புலிகளின் யுக்திகளை சொல்லிக் கொடுத்துவிட்டார் கருணா.

தற்போது ஜனநாயக பாதைக்கு திரும்ப முடிவெடுத்து விட்டீர்களா? வடக்கு மாகாண மக்களுக்கு எந்த வகையான தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

அரசியல் போராட்டங்களில் பல பரிணாமங்கள் இருக்கின்றன. ஒரு இனம் எந்தெந்த முயற்சிகள் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்தோம். உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டதால் அமைதிப் போராட்டம் நடைபெற்றது. பின்னர் இது ஆயுதப் போராட்டமாக மாறியது.

விடுதலைப் போராட்டத்திற்கு ஆயுதப் போராட்டம் ஒரு கருவி. ஆயுதப் போராட்டத்தின் மௌனிப்பிற்கு பின்னால், புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் இளையோர் இப்போது ஜனநாயக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆயுதப் போராட்டத்தை நடத்திவிட்டு அடுத்தகட்ட போராட்டத்தை அடுத்த சந்ததியின் கையில் கொடுத்துவிட்டு தலைவர் சென்றிருக்கிறார். ஆகவே, நாங்கள் அடுத்த ஜனநாயக போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

இலங்கையின் புதிய ஆட்சியினால் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

நிச்சயமாக இல்லை. ஏனென்றால் காலம் காலமாக சிங்களத் தலைவர்களால் நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம். அது வரலாறு. அந்த வரலாறை மூடி மறைக்க முடியாது. இலங்கையில் ஒரு வன்போக்கு அரசியல்வாதியின் ஆட்சி முடிந்திருக்கிறது. மென்போக்கு அரசியல்வாதியின் ஆட்சி தொடங்கியிருக்கிறது. இந்த மென்போக்கு அரசியல்வாதியின் ஆட்சிதான் ஆபத்தாக முடியும்.

மிகப்பெரிய இனப்படுகொலை நடந்து முடிந்த இடத்தில் எங்களுடைய மக்கள் பிரதிநிதிகளை வைத்துக்கொண்டே அங்கு இனப்படுகொலை நடந்ததற்கான சட்டப்பூர்வமான எந்த விசயங்களும் இல்லை என்று சொல்லப்படுகின்ற அளவிற்கு தமிழர்களின் மக்கள் பிரதிநிதிகளை கொண்டுவரும் ஆட்சிதான் இப்போது வந்திருகிறது.

மென்போக்கு அரசியல் நடவடிக்கையை மேற்கொண்டு உலகத்தை தங்கள் பக்கம் ஈர்த்து, தமிழர்களின் இருப்பை இல்லாமல் செய்வார்களே ஒழிய, தமிழர்களுக்கு எந்தவிதமான தீர்வையும் தரமாட்டார்கள்.

தமிழ் மக்களே ஜனநாயகத்தை விரும்பி வாக்களித்திருகிறார்கள்? என்ன முடிவைத்தான் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் சிலரை தேர்வு செய்கிறார்கள். பிரிந்து செல்வதா? சேர்ந்து வாழ்வதா என்பதை தமிழீழத்தில் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்கிற ஒரு பொதுவாக்கெடுப்பை ஐக்கிய நாடுகளில் இருக்கின்ற சட்டத்தை பயன்படுத்தி, ஜனநாயக சரத்துக்கு அமைவாக எங்களுடைய போராட்டத்தைத்தான் நாங்கள் செய்யப் போகின்றோம்.

ராஜபக்சவை வைத்துக் கொண்டு போரை நடத்திய நாடுகள்தான் அதே ராஜபக்சவை வெளியேற்ற வேண்டும் என்று நினைத்தார்கள். வெளியேற்றுவதற்கான சூழ்ச்சியையும் செய்தார்கள். வெளியேற்றியும் விட்டார்கள். அதே போல்தான் இந்த அரசும் அதே வேலையைச் செய்யும் என்பது அவர்கள் மிக குறுகிய காலத்தில் கற்றுக் கொள்வார்கள். அப்போது எங்களுடைய போராட்டம் வெற்றி அளிக்கும் என்பதுதான் என்னுடைய வாதம்.

2009 போர்க்காலம் வரை பிரபாகரனும் நீங்கள் இருந்திருக்கிறீர்கள். தற்போது, பிரபகாரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? உங்களுக்குத் தெரிந்த தகவல் என்ன?

சில விசயங்களை நாங்கள் இப்போது சொல்வது என்பது சாத்தியமில்லாத விசயமாக இருக்கும். நாட்டுக்காக இறுதி வரை மக்களோடு மக்களாக நின்று போராடுவேன். வெற்றி பெற இயலவில்லை என்றால் மாவீரர்களோடு இணைந்து விடுவேன். இதுதான் தலைவர் சொன்ன விசயம். இதை சிறுபிள்ளைத்தனமாக நாங்கள் பிரித்துப் பார்ப்பது என்பது நல்லது இல்லை என்பது என் கருத்து.

பிரபாகரனுடைய மனைவி உயிருடன் இருக்கிறாரா? எங்கே இருக்கிறார்?

தலைவருடைய மூத்த மகனும் மகளும் களத்திலேயே பலியானார்கள் என்பது செய்திகளில் வந்திருக்கும். அதை மூடி மறைப்பதற்கு எதுவுமில்லை. இளைய மகன் என்ன ஆனார் என்பதை ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். தலைவரின் மனைவி விசயத்தில் என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வதுதான் சாலப்பொருத்தம் என்று நான் நினைக்கிறேன்.