2016 டாப் 5 டைரக்டர்

January 04, 2017

நெருப்புடா!

மூன்றாவது படத்திலேயே சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு. ஓர் இளம் இயக்குநருக்கு குருவி தலையில் பனங்காய் வைத்த கதைதான். இந்த சுமையை தைரியமாக, எளிதாக சுமந்தார் பா.ரஞ்சித். கபாலி, ரஜினிக்கே புதுசு என்பது மாதிரி ரஞ்சித் காட்டியிருக்கும் ரூட்டு தனி ரூட்டு. ரஜினியே விரும்பி மீண்டும் ரஞ்சித்துடன் இணைகிறார் எனும்போது நாமென்ன புதுசாக சொல்ல வேண்டியிருக்கிறது?

நிகழ்ந்துவிட்ட அதிசயம்!

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு துரோகி மூலம் இயக்குநராக அறிமுகமானபோது சுதா கொங்கராவுக்கு, வழக்கமான பெண் இயக்குநர்களுக்கு கிடைக்கும் சோபையான வரவேற்பே கிடைத்தது. பெரும் போராட்டங்களை நிகழ்த்தி, ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கிய இறுதிச் சுற்று, அவருக்கு மட்டுமின்றி திரைத்துறையில் போராடிக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பெண்களுக்கும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. மூத்த நடிகரான மாதவனையும், அறிமுக நடிகையான ரித்திகா சிங்கையும் அவர் துல்லியமாக வேலை வாங்கிய உழைப்பு, தியேட்டர் திரையில் இன்ச் பை இன்ச்சாகத் தெரிந்தது. பெண்கள் தைரியமாக டைரக்‌ஷன் துறையில் ஈடுபட சிகப்புக் கம்பளம் விரித்திருக்கிறார் சுதா.

அபத்தங்களை அழகாக்குபவர்!

எப்பவுமே விளையாட்டுதான் வெங்கட்பிரபுவுக்கு. அவர் இயக்கிய முதல் படமே விளையாட்டை மையப்படுத்தியது என்பதாலும் இருக்கலாம். இவருக்கு சீரியஸாகவே ஒரு சீனை கூட எழுதத் தெரியாதா என்று சந்தேகம் கொள்ளுமளவுக்கு சிரியஸாகவே காட்சிகளை அமைக்கிறார். Boys are back என்கிற அறிவிப்போடு, ஆண்டு இறுதியில் வெளிவந்து மக்களை கலகலப்பூட்டிய சென்னை 600028 - 2 மூலமாக Venkat Prabhu is back என்கிற மகிழ்ச்சிக்குரிய நிகழ்வும் நடந்திருக்கிறது.

அக்கறைதான் அடையாளம்!

இயக்குநராக சீனு ராமசாமிக்கு பத்தாவது ஆண்டு பிறக்கிறது. ஆனால், இவரது இயக்கத்தில் நாலே நாலு படம்தான் வெளிவந்திருக்கிறது. வெற்றிக்காக படமெடுக்கும் இயக்குநராக இருந்திருந்தால் பத்து, பதினைந்து படங்கள் இயக்கி செட்டில் ஆகியிருப்பார். இந்த மண்ணின் மீதும் மக்களின் மீதும் அவருக்கு அக்கறை இருப்பதால்தான் சமூகப் பிரச்னைகளை மையப்படுத்திய கதைகளை மட்டுமே எடுக்கிறார். வணிக வெற்றி தோல்வி பற்றியெல்லாம் கவலைப்படாமல் மிகத்தைரியமாக அவர் எடுத்த தர்மதுரை நல்ல உதாரணம். மசாலா கரைத்து மங்காத்தா ஆடவேண்டிய ஸ்க்ரிப்டை வைத்துக்கொண்டு, ரசிகர்களிடம் நல்ல விஷயங்களை பிரச்சாரம் செய்த சீனு சாருக்கு ஒரு பிக் சல்யூட்!

அழவைத்த ஜோக்கர்!

குக்கூ மூலம் மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் இயக்குநராக அறிமுகமான ராஜு முருகன், ஜோக்கர் படத்தில் இந்த ஆண்டு எடுத்திருக்கும் விஸ்வரூபம் அபாரமானது. அங்கதமும், கூர்மையான அரசியல் விமர்சனமுமாக கத்தி மேல் வித்தை செய்து, அவர் எடுத்த இந்தப் படம் விமர்சகர்களின் ஒட்டுமொத்த பாராட்டுகளையும் அள்ளியது. கிளைமேக்ஸில் ஜோக்கர் அடைந்த அவலத்தைக் கண்டு அழாத ரசிகனே இல்லை. தமிழில் இப்போது யாரும் தொடத் தயங்கும் அரசியல் சப்ஜெக்டை, அல்வா சாப்பிடுவது மாதிரி அனாயாசமாக எடுத்தார் ராஜு. கதையின் மீது அவருக்கு இருந்த கன்ட்ரோல், செய்நேர்த்தியிலும் அபாரமாக வெளிப்பட்டது.

செய்திகள்
செவ்வாய் March 21, 2017

தமிழகத்தின் முன்னேற்றமே நமது முன்னேற்றம் என்று கூறி உள்ள இயக்குனர் தங்கர்பச்சான் இளைஞர்களுக்காக புதிய இயக்கத்தை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.