21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டி இல்லை!

ஞாயிறு மார்ச் 10, 2019

21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டி இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்திகதி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். அப்போது போர் வரும்போது பார்த்துக் கொள்வோம் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அவர் அரசியல் கட்சி தொடங்குவதற்கான கட்டமைப்பை தொடங்கினார். ரஜினி மக்கள் மன்றம் அமைப்பை உருவாக்கி மாவட்டம் தோறும் நிர்வாகிகளை நியமித்தார். உறுப்பினர் சேர்க்கையும் நடந்தது.

எனவே ரஜினி விரைவில் தனது அரசியல் கட்சியை அறிவிப்பார் என்று கடந்த ஒரு ஆண்டாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை.மேலும் தொடர்ந்து புதிய படங்களில் நடித்து வந்தார்.

இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த். சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு, பாராளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.

எனவே 21 தொகுதி இடைத்தேர்தலில் ரஜினி கட்சி போட்டியிடலாம் என்றும், அதற்குள் புதிய கட்சி அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த் மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு இன்று மதியம் வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்று கூறி இருக்கிறீர்கள். 21 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா?

பதில்:- இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.

கே:- தண்ணீர் தரும் கட்சிகளுக்கு தான் ஓட்டு என்று சொல்லி இருக்கிறீர்கள். அது மத்திய கட்சியா? மாநில கட்சியா?

ப:-இரண்டுமே

கே:- நாடாளுமன்ற தேர்தலில் உங்களுடைய ஆதரவு யாருக்கு?

ப:- அதைப்பற்றி இப்போது கூறமுடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.