21 வயதுக்குட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை-அமெரிக்கா

புதன் சனவரி 15, 2020

அமெரிக்காவில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்துவதைத் தடை செய்யக் கோரும் மசோதா ஒன்று அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க செனட் சபையில், வெர்மோன்ட் மாகாணத்தை சேர்ந்த ஜனநாயக கட்சி உறுப்பினர் ஜோன் ரோட்ஜர்ஸ் இந்த மசோதாவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், 21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போனை சொந்தமாக வைத்திருப்பதையும், பயன்படுத்துவதையும் சட்டவிரோதம் என அமெரிக்க அரசாங்கம் சட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

செல்போனை பாதுகாப்பாக பயன்படுத்த 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு போதிய முதிர்ச்சி கிடையாது என்றும், செல்போன் மூலம் அவர்கள் பல்வேறு ஆபத்துகளை சந்திக்க நேரிடுவதாகவும் அம்மசோதாவில் கூறப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

அத்துடன், இந்த தடையை மீறுவோருக்கு ஓராண்டுவரை சிறைத்தண்டனையும்,  பண அபராதமும் விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதே வேளை, இந்த மசோதாவை முன்வைத்த செனட் சபை உறுப்பினர் ஜோன் ரோட்ஜர்ஸ் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,“இந்த மசோதா நிறைவேறும் என்று எதிர்பார்க்கவில்லை, ஒரு விழிப்புணர்வுக்காகவே தாக்கல் செய்தேன்“ என்று ஊடகங்களிடம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.