255 பேர் மருத்துவ பாதுகாப்புடன் கண்காணிப்பு!

வியாழன் மார்ச் 26, 2020

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 255 பேர் 21 வைத்தியசாலைகளில் மருத்துவ பாதுகாப்பின் கீழ் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்துடன், நேற்று (25) புதிய கொரோனா வைரஸ் தொற்றுடன் யாரும் அடையாளம் காணப்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதன்படி தற்போதுவரை இலங்கையில் 102 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் பூரண குணமடைந்து ஐ.டி.எச் வைத்தியசாலையில் இருந்து நேற்று வெளியேறினார்.

ஏற்கெனவே இலங்கையில் முதன்முறையாக இந்த தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட சுற்றுலா வழிகாட்டியும் குணமடைந்திருந்தார்.

முன்னதாக, சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவரும் இந்த நோயில் இருந்து குணமடைந்து நாடு திரும்பியிருந்தார்.

இதனையடுத்து, தற்போது வரையில் 99 பேர் கொரோனா நோயுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கொழும்பு மாவட்டத்தில் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், களுத்துறை மாட்டத்தில் 14 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 10 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 9 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.