256 எம்.பி. கமராவுடன் உருவாகும் புதிய ஸ்மார்ட்போன்!

செவ்வாய் சனவரி 21, 2020

சீன வலைதளம் ஒன்றில் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஸ்மார்ட்போன் ஒன்றில் 256 எம்.பி. கமரா வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

தொழில்நுட்ப சந்தையில் வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் 108 எம்.பி. பிரைமரி கேமரா வழக்கமான ஒன்றாக மாற துவங்கி இருக்கிறது. இந்நிலையில், சீன வலைதளமான வெய்போவில் வெளியாகி இருக்கும் தகவல்களில் 256 எம்.பி. கேமரா மோட் கொண்ட ஸ்மார்ட்போனின் விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.

இதனுடன் வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்றில் கேமரா செயலியில் 256 எம்.பி. மோட் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், ஸ்மார்ட்போன் பிராண்டு மற்றும் மாடல் பற்றி எவ்வித தகவலும் இல்லை. தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படத்தின் யூசர் இன்டர்ஃபேசை பார்க்கும் போது சியோமி, ஒப்போ மற்றும் ரியல்மி பிராண்டுகளில் ஒன்றாக இருக்கலாம் என தெரிகிறது.

 

256 எம்.பி. மோட்

 

தற்சமயம் வரை இது உறுதி செய்யப்படாத தகவலாக இருக்கும் நிலையில், 256 எம்.பி. கமரா சொன்சாரை இயக்கும் திறன் கொண்ட சிப்செட் இதுவரை வெளியாகவில்லை. மேலும் தற்சமயம் வெளியாக இருக்கும் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸரிலும் ஒற்றை லென்ஸ் 200 எம்.பி. கேமராவை இயக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

சியோமியின் Mi 10 ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதத்தில் அறிமுகமாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 108 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. சியோமியின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிகிறது.

சாம்சங் நிறுவனம் பிப்ரவரி 12-ம் தேதி தனது புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் சீரிசை அறிமுகம் செய்ய இருக்கிறது. சியோமி Mi 10 ஸ்மார்ட்போனிற்கு முன்பே கேலக்ஸி எஸ்11 அல்லது கேலக்ஸி எஸ்20 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இவை இருக்கும்.