26 சிறுவர்கள் உட்பட 66 பேருக்கு டெங்கு !

திங்கள் டிசம்பர் 02, 2019

திருகோணமலை பொது வைத்தியசாலையில் 66 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களில் இரத்தப் பரிசோதனையின் மூலம் 66 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், இதில் 26 சிறார்களும் ஒரு கர்ப்பிணித் தாயொருவரும்  அடங்குவதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் இதன்போது தெரிவித்தார். 

அத்துடன் திருகோணமலை நகர் பகுதியில் அலஸ் தோட்டம், ஆனந்தபுரி, செல்வநாயகபுரம், பாலையூற்று, அன்புவளிபுரம், சீனக்குடா ஆண்டாங்குளம், உவர்மலை போன்ற பகுதிகளில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் 3683 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் டெங்கு காய்ச்சலால் திருகோணமலையில் மூன்று பேர் மரணித்துள்ள நிலையில் மட்டக்களப்பில் இருவரும் அம்பாறையில் ஒருவரும் மரணித்து உள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர் ஏ. எல். அலாவுதீன் தெரிவித்தார். 

கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் வீடுவீடாகச் சென்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருவதுடன் வீடுகளையும், அரச திணைக்களங்கள்,  வெற்று காணிகள் போன்றவற்றை சோதனையிட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.