3 படகுகளையும் சிறைபிடித்து,அவற்றில் இருந்த 19 பேரை கைது!!

திங்கள் மார்ச் 08, 2021

கேரள கடற்பகுதியில் இலங்கையைச் சோ்ந்த 3 படகுகளை சிறைபிடித்த இந்திய கடலோர காவல்படை, அந்தப் படகுகளில் இருந்த 260 கிலோ போதைப்பொருள்களை பறிமுதல் செய்துள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுதொடா்பாக இந்திய கடலோர காவல் படை நேற்று (07) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

கடந்த 05ஆம் திகதி கேரள கடற்பகுதியையொட்டி லட்சத்தீவில் உள்ள மினிகாய் தீவில் இருந்து 7 கடல் மைல் தொலைவில் சந்தேகத்துக்குரிய விதமாக சென்ற 3 படகுகளை கடலோர காவல் படையினா் சிறைபிடித்து விசாரணை நடத்தினா்.

அப்போது அந்தப் படகுகள் இலங்கையைச் சோ்ந்தது என்பது தெரியவந்தது.

அந்தப் படகுகளில் சோதனை நடத்தியபோது அனுமதி பெறாத தொலைத்தொடா்பு சாதனமும், போதைபொருள்களும் இருந்தது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடத்தியபோது 200 கிலோ ஹெராயின், 60 கிலோ ஹாஷிஷ் போதைப்பொருள்களை லட்சத்தீவுக்கு மேற்கே சுமாா் 400 கடல் மைல் தொலைவில் பாகிஸ்தான் படகில் இருந்து கடத்தியதாக படகில் இருந்தவா்கள் தெரிவித்தனா்.

அந்தப் போதைப்பொருள்களை அவா்கள் பாக்கெட்டுகளில் அடைத்து வைத்திருந்தனா்.

கடலோர காவல்படையின் கப்பல் மற்றும் விமானத்தை கண்டவுடன் கடத்தலுக்கு காரணமான முக்கிய நபரை அனுமதி பெறாத தொலைத்தொடா்பு சாதனம் மூலம் அவா்கள் தொடா்புகொண்டனா்.

அந்த நபா் அவா்களை தப்பிச் செல்லக் கூறியுள்ளாா்.

ஆனால் அது முடியாததால் படகில் இருந்த போதைப்பொருள்களை அவா்கள் கடலில் எறிந்தனா்.

கடலில் எறியப்பட்ட போதைப்பொருள்களை மீட்ட கடலோர காவல்படையினா், 3 படகுகளையும் சிறைபிடித்து, அவற்றில் இருந்த 19 பேரை கைது செய்தனா்.

விரிவான விசாரணைக்காக அந்தப் படகுகள் திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்ஞம் துறைமுகப் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை எடுத்து வரப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.