3 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவை நடத்துங்கள்

வியாழன் ஓகஸ்ட் 06, 2020

நிக்கவரெட்டியவில் உள்ள இரண்டு வாக்குச் சாவடிகளிலும் கொபெய்கனையில் உள்ள ஒரு வாக்குச் சாவடியிலும் மறுவாக்கெடுப்பு நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

 இந்த மூன்று வாக்குசாவடிகளுக்கும் பிரதமரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தனது ஆதரவாளர்களுடன் நுழைந்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம்சாட்டியுள்ளார்.

 குறிப்பாக பொதுத் தேர்தல்கள் வாக்குப்பதிவின்போது மஹிந்த ராஜபக்ஷ 100 வாக்காளர்களுடன் மூன்று வாக்குச் சாவடிகளுக்குள் நுழைந்தார் எனக் கூறப்படுகிறது.

 எனவே இந்தச் சம்பவம் சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பை அப்பட்டமாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என அவர் கூறியுள்ளார். அத்தகைய வேட்பாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்வதாகவும் அவ்வாறு செய்யத் தவறினால், அந்த வாக்குச் சாவடிகளில் மறுவாக்கெடுப்பை நடத்த நாள் ஒதுக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 இதேவேளை, மஹிந்த அங்கீகரிக்கப்படாத ஏராளமான ஆதரவாளர்கள் மற்றும் வாகனங்களுடன் நிக்கவரெட்டிய பகுதியில் பயணித்தார் எனத் தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையமும் உறுதிப்படுத்தியுள்ளது.

 அத்தோடு மகாசென் தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு வாக்குச் சாவடிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வருகை தந்தார் எனவும் தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையமும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.