300 ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த விஷால்!

Monday December 04, 2017

சுமார் 300 ஆதரவாளர்கள் புடைசூழ மோட்டார் பைக்கில் நடிகர் விஷால் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தண்டையார் பேட்டை அலுவலகத்திற்கு வந்தார்.

ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்திகதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., டி.டி.வி. தினகரன் அணி, பா.ஜ.க., நடிகர் விஷால், நாம் தமிழர் கட்சி, ஜெ.தீபா ஆகியோருக்கு இடையே 7 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

வேட்பு மனுதாக்கல் கடந்த 27-ந்திகதி தொடங்கியது. வெள்ளிக்கிழமை வரை 30 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். கடைசி நாளான இன்றும் சிலர் மனுதாக்கல் செய்தனர். முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர். பிரதான கட்சிகளில் பா.ஜ.க கட்சியின் வேட்பாளர் கரு.நாகராஜன் இன்று மனுதாக்கல் செய்தார்.

திடீரென அரசியல் குதித்துள்ள நடிகர் விஷால் இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சுமார் 300 ஆதரவாளர்கள் புடைசூழ மோட்டார் பைக்கில் தண்டையார் பேட்டை அலுவலகத்திற்கு வந்தார். ஏற்கனவே, அங்கு சுயேட்சைகள் குவிந்துள்ளதால், விஷால் வரிசையில் வர வேண்டும் என அவர்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

3 மணியோடு வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் முடிவடைவதால், விஷாலுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதனால், அவர் வரிசையில் வேட்புமனுவை தாக்கல் செய்ய முடியும். தனக்கு விசில் சின்னம் வேண்டும் என வேட்புமனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.