4 லட்சம் கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க இங்கிலாந்து தயார்!

Saturday December 09, 2017

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து செல்வதற்கு ரூ.3 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதல் ரூ.4 லட்சத்து 18 ஆயிரம் கோடி வரையில் தருவதற்கு இங்கிலாந்து முன்வந்துள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து செல்வது தொடர்பாக, அந்த அமைப்புடன் இங்கிலாந்துக்கு பிரிவினை உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனின் அங்கமாக இங்கிலாந்து இருந்து வந்தது. ஆனால் அதில் இருந்து வெளியேறுவது தொடர்பாக, இங்கிலாந்தில் டேவிட் கேமரூன் பிரதமராக இருந்த போது பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ந் தேதி அங்கு மக்கள் கருத்தறியும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் சுமார் 52 சதவீதம் பேர் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது உறுதியானது. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுகிற முதல் நாடு என்ற பெயரை இங்கிலாந்து பெறுகிறது.

ஆனால் இது எளிதான நடவடிக்கை அல்ல, பல கட்டங்களை கடந்து செல்ல வேண்டியது இருக்கிறது.

இங்கிலாந்து பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டியதிருந்தது. அந்த ஒப்புதலும் கிடைத்து விட்டது.

இந்த நிலையில், இதற்கான (பிரிக்ஜிட்) முதல் நடவடிக்கையாக ஐரோப்பிய யூனியன் உடன்படிக்கை பிரிவு 50-ஐ கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி இங்கிலாந்து பிரகடனம் செய்தது. இதன்படி 2 ஆண்டுகளில், அதாவது 2019-ம் ஆண்டு, மார்ச் மாதம் 29-ந் தேதி ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டும்.

இந்த நிலையில் இதற்கான பேச்சுவார்த்தையை இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தொடங்கினார். அயர்லாந்துடனான எல்லை விவகாரத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து தெரசா மே, பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் விரைந்தார். அங்கு அவர் ஐரோப்பிய யூனியனுடன் பேச்சுவார்தை நடத்தினார்.

இதையடுத்து ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பாக இங்கிலாந்துக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரிவினை உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி ஐரோப்பிய யூனியன் கமிஷன் விடுத்துள்ள அறிக்கையில், “ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரச்சினையில், அயர்லாந்து எல்லை உள்ளிட்ட பல அம்சங்களில் போதுமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

இரவு, பகலாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர்தான் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பிரிவினை உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து செல்வதற்கு 45-55 பில்லியன் ஈரோ (சுமார் ரூ.3 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதல் ரூ.4 லட்சத்து 18 ஆயிரம் கோடி வரையில்) தருவதற்கு இங்கிலாந்து முன்வந்துள்ளது.

ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜோன் கிளவுட் ஜங்கருடன் பிரசல்ஸ் நகரில் நிருபர்களை சந்தித்த இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, “அயர்லாந்துடனான எல்லையில் கடினமான நிலை (சிக்கல்) இருக்காது என்பதற்கு நாங்கள் உறுதி கூறுகிறோம்” என்று குறிப்பிட்டார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து பிரிந்தாலும், அங்கு வாழ்கிற ஐரோப்பிய நாடுகளின் மக்கள் தொடர்ந்து அங்கு வசிக்க முடியும். அடுத்த கட்ட பிரிக்ஜிட் நடவடிக்கை வருகிற 14, 15 தpfதிகளில் நடைபெறும் என தகவல்கள் கூறுகின்றன.