400 டாலருக்கு அடிமைகளாக விற்கப்படும் அகதிகள்!

Thursday November 16, 2017

ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் செல்லும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் லிபியாவில் கொள்ளையர்களால் 400 டாலருக்கு அடிமைகளாக விற்கப்படுகின்றனர்.

வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.  வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் அதிபர் கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பதவி வெறிபிடித்த போராளிக் குழுக்களின் மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து தப்பித்து உயிரை பாதுகாத்துகொள்ள லிபியாவில் வறுமை நிலையில் வாடும் மக்களில் பலர் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி செல்கின்றனர். மேலும், உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும் இடம்பெயர்கின்றனர்.

பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் இந்த அகதிகள், ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர். ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்கு செல்லும் அகதிகள் லிபியா வழியாக செல்கின்றனர். அப்போது லிபியாவில் உள்ள கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்டு அடிமைகளாக விற்கப்படுகின்றனர். அவர்கள் 400-600 டாலருக்கு விற்கப்படுகின்றனர்.

இதனை பத்திரிக்கையாளர் ஒருவர் வீடியொ எடுத்துள்ளார். மக்களை அடிமைகளாக விலைக்கு வாங்கும் நிகழ்வு அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர். இதனை பல உலக தலைவர்கள் எதித்து வருகின்றனர்.