4000 இந்தோனேசியர்களின் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இந்தோனேசியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் முறையான ஆவணங்களின்றி சிக்குவதைத் தடுக்கும் விதமாக, மனிதவள அமைச்சகத்தின் பரிந்துரை கடிதத்தை (வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள்) கடவுச்சீட்டு விண்ணப்பிக்கும் போது இணைக்கக் கோருகிறது இந்தோனேசிய குடியேற்றத்துறை.
அவ்வாறு, பரிந்துரை கடிதம் உள்ளிட்ட முறையான ஆவணங்களின்றி கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த 4,198 இந்தோனேசியர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது கடந்த 9 மாதத்தில் இந்தோனேசியாவில் உள்ள 125 குடியேற்றத்துறை அலுவலகங்களில் நிராகரிக்கப்பட்ட எண்ணிக்கையாகும்.
அதே காலக்கட்டத்தில் 465 இந்தோனேசியர்கள் வெளிநாடுகளை வேலைக்கு செல்வதிலிருந்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த முன்னெச்சரிக்கை பரிசோதனைகள் ஜகார்த்தாவின் Soekarno Hatta விமானநிலையம், சுராபயாவின் Juanda விமான நிலையம் மற்றும் இந்தோனேசியா- மலேசியாவை சாலை வழியாக இணைக்கும் எண்டிகாங் சோதனைச் சாவடியில் நடைபெற்றுள்ளதாக கூறுகின்றது இந்தோனேசிய குடியேற்றத்துறை.
“தனிப்பட்ட நபர்களின் விவரங்கள், விரிவான நேர்முகத்தின் அடிப்படையில் ஆபத்தில் சிக்கக்கூடிய இந்தோனேசியர்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். வெளிநாடுகளில் மனித கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களாக இந்தோனேசியர்கள் மாறக்கூடாது என்ற பாதுகாப்பு கோணத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது,” எனக் கூறியிருக்கிறார் குடியேற்றத்துறை இயக்குனர் ஜெனரலின் மக்கள் தொடர்பு அதிகாரியான சாம் பெர்னாண்டஸ்.