45 நாட்கள் ஆன நிலையில் தொடர் வேலை நிறுத்தத்தை கைவிட உள்ளதாக தொழிற்சங்கம் அறிவிப்பு!

சனி சனவரி 18, 2020

வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டு 45 நாட்கள் ஆன நிலையில், தற்போது தொடர் வேலை நிறுத்தத்தை கைவிட உள்ளதாக தொழிற்சங்கம் ஒன்று அறிவித்துள்ளது.
 
இன்று ஜனவரி 18 ஆம் திகதி சனிக்கிழமை Unsa-RATP தொழிற்சங்கம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. தொழிற்சங்க உறுப்பினர்களிடம் பொது கூட்டம் ஒன்றில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பினை தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை 20 ஆம் திகதியுடன் தொடர் வேலை நிறுத்தத்தை கைவிட உள்ளனர்.

கணக்கெடுப்பில் தொழிற்சங்க உறுப்பினர்களிடம் போதிய ஆதரவு இல்லாததால், இந்த தொடர் வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.  
 
அதற்கு பதிலாக தங்கள் கோரிக்கைகளை நாள் ஒன்றினை தேர்ந்தெடுத்து அந்நாளில் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தினை தொடர உள்ளதாக அறிவித்துள்ளனர்.

வரும் ஜனவரி 24 ஆம் திகதி முன்னர் திட்டமிடப்பட்டிருந்த நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் இடம்பெறும் எனவும், அதன் பின்னரான ஆர்ப்பாட்ட திகதி குறித்து அறிவிக்கப்படும் எனவும் Unsa-RATP அறிவித்துள்ளது.