6 வயது சிறுமி பாலியல் துஸ்ப்பிரயோகம் செய்யப்பட்டு கொலை

ஞாயிறு ஜூலை 08, 2018

பிரிட்டன் நாட்டின் ஸ்காட்லாந்து பகுதிக்கு உட்பட்ட புட்டே தீவு நகரமான பன்னட்டைனே துறைமுகம் பகுதியில் தனது தாத்தா, பாட்டி மற்றும் தந்தை ரப் மேக்பைல்(25) ஆகியோருடன் வசித்துவந்த அலேஷா மேக்பைல் என்னும் 6 வயது சிறுமி கடந்த திங்கட்கிழமை திடீரென மாயமானாள்.

இச்சம்பவம் தொடர்பாக ஸ்காட்லாந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்த நிலையில், அருகாமையில் உள்ள உட்லண்ட்ஸ் என்னும் இடத்தில் தனிமையான காட்டுப் பகுதியில் அலங்கோலமான நிலையில் அந்த சிறுமியின் பிரேதத்தை அப்பகுதி மக்கள் கண்டெடுத்தனர்.

பிரேதப் பரிசோதனை முடிவின்படி, அலேஷா மேக்பைல் பாலியல் துஸ்ப்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக தெரியவந்த நிலையில் கொலையாளியை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த சிறுமி வாழ்ந்த வீட்டின் அருகே நின்றிருந்த ஒரு காரை தடயமாக வைத்து விசாரணையில் முன்னேறிய போலீசார், அலேஷா மேக்பைல் குடும்பத்தாருக்கு நன்கு பழக்கமான 16 வயது சிறுவனை இன்று கைது செய்து க்ரினாக் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இரண்டாம் வகுப்பில் படித்துவந்த சிறுமி அலேஷாவின் மறைவு அவரது உறவினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மத்தியிலும் ஆறாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.