6 முறை விபத்துக்களை சந்தித்த IAF Mi - 17V5 ரக உலங்கு வானூர்தி!

புதன் டிசம்பர் 08, 2021

சென்னை- IAF Mi - 17V5 ரக உலங்கு வானூர்தி கடந்த 8 ஆண்டுகளில் இதுவரை 6 முறை விபத்துகளை சந்தித்துள்ளதாக அதிர்ச்சிகர செய்தி தற்போது வெளியாகியுள்ளது

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் சென்ற IAF Mi - 17V5 உலங்கு வானூர்தி குன்னூரில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் அடர்ந்த மலை பகுதியான காட்டேரி மலைப்பகுதியில் மோதி கீழே விழுந்து நெருங்கியது.

இந்த விபத்தில் சிக்கியதில் இதுவரை 12 பேரின் கருகிய உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மருத்துவம், ராணுவம் என பல்பேறு குழுக்களும் அங்கு பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கள நிலவரங்கள் குறித்து அறிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குன்னூர் விரைந்தார்.

இதனிடையே ராணுவ உலங்கு வானூர்தி விபத்து குறித்து ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட மூத்த ஒன்றிய அமைச்சர்களுடன் ஒன்றிய பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

இந்த நிலையில், IAF Mi - 17V5 ரக உலங்கு வானூர்தி குறித்து அதிர்ச்சியளிக்கக் கூடிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, கடந்த 8 ஆண்டுகளில் 6 முறை இந்த IAF Mi - 17V5 ரக உலங்கு வானூர்திகள் விபத்துகளை சந்தித்துள்ளது. 2013-ம் ஆண்டு ஜுன் 25, 2016-ம் ஆண்டு ஓக்டோபர் 19, 2017-ம் ஆண்டு ஓக்டோபர் 6, 2018 ஆண்டு ஏப்ரல் 3, 2019-ம் ஆண்டு பெப்ரவரி 27 மற்றும் இன்று (டிசம்பர் 8, 2021) என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டின் முப்படையின் தலைமை தளபதி செல்லும் உலங்கு வானூர்தியின் நிலையே இந்த அளவுக்கு இருக்குமெனில் மக்களுக்கான பாதுகாப்பு எப்படியாக இருக்கும் என சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள், இணையதள வாசிகள் ஒன்றிய பாஜக அரசை கடுமையாக சாடியும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.