7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு உறுதியாக உள்ளது!

வியாழன் பெப்ரவரி 13, 2020

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு உறுதியாக உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

கோவில்பட்டி அருகே வானரமுட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அவரது வழியில் சிறப்பாக செயல்பட்டு வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கால்நடை தொழிலை வளர்க்கும் வகையில், ரூ.1,000 கோடியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவை சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கும் பணியை தொடங்கி வைத்துள்ளார்.

மேலும் வேளாண் தொழிலை பாதுகாக்கும் வகையில், காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து உள்ளார். இதன் மூலம் அங்கு வேளாண்மையை தவிர வேறு எந்த தொழில்களும் செயல்படுத்தப்படாது என்பதுதான் அந்த அறிவிப்பின் நோக்கம்.

நடிகர் ரஜினிகாந்த் இன்னும் கட்சியே தொடங்கவில்லை. எனவே அவருடன் கூட்டணி பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார். எனவே அதனைப்பற்றி கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உறுதியாக இருந்தார். இதுகுறித்து அவர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அவரது வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினார்.
 

மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் தான் பேரறிவாளன் உள்ளிட்டவர்களுக்கு பரோல் வழங்கப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கைகள் தி.மு.க. ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை. எனவே இவற்றையெல்லாம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ புரிந்து கொண்டு, அரசியலுக்காக அ.தி.மு.க. ஆட்சியை குறைகூறுவதை நிறுத்த வேண்டும்.


பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு உறுதியாக உள்ளது. இதற்காக தேவையான அழுத்தத்தை மத்திய அரசுக்கு தொடர்ந்து கொடுத்து வருகிறோம். அவர்களது விடுதலைக்கு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

பா.ஜனதாவுடன் நல்லுறவில் இருப்பதால்தான் தமிழகத்தில் அதிகளவிலான ரெயில்வே திட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு ரெயில்வே திட்ட பணிகளுக்கு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். அ.தி.மு.க. எப்போதும் மக்களை நம்பித்தான் தேர்தலை சந்திக்கிறது. மற்ற கட்சிகளைப் போன்று கம்பெனிகளை நம்பி தேர்தலை சந்தித்தது கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.