7 விதமான புற்றுநோய்களைத் தடுக்க பல்வேறு உடற்பயிற்சிகள்!

சனி டிசம்பர் 28, 2019

ஓய்வாக இருக்கும் நேரங்களில் ஒரு குறிப்பிட்ட உடற்பயிற்சிகளை பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் மேற்கொண்டால் 7 விதமான கேன்சர் நோய்களைத் தடுக்க முடியும் என்று அமெரிக்க தேசிய கேன்சர் கழக ஆய்வு ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய ஆய்வுகளிலும் உடற்பயிற்சி கேன்சர் நோய்களிலிருந்து பாதுகாக்கும் என்பது ஆய்வுபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறிப்பிட்ட வகை உடற்பயிற்சிகளை அதன் பரிந்துரைக்கப்பட்ட அளவு, நேரம் ஆகியவற்றுடன் செய்வதன் மூலம் 7 விதமான கேன்சர்களிலிருந்து உடலை பாதுகாக்கலாம் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளினிக்கல் ஆங்க்காலஜி என்ற இதழில் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வுக்காக 750,000 தனிநபர்கள் ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த ஆய்வுகளின் படி வாரம் ஒன்றிறு இரண்டரை மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை மிதமான உடற்பயிற்சி அல்லது ஒன்றேகால் மணி முதல் இரண்டரை மணி நேரம் வரையிலான கடும் உடற்பயிற்சிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மித நிலை உடற்பயிற்சி செயல்பாடுகள் என்பது ஒரு நபர் ஒன்றுமே செய்யாமல் அமர்ந்திருப்பதைக் காட்டிலும் வேகமாக நடப்பது ஓடுவது போன்ற செயல்களினால் 6 மடங்கு ஆற்றலை ஒருநிமிடத்தில் செலவிடுவது என்பதைக் குறிக்கிறது, கடும் உடற்பயிற்சிச் செயல்கள் அல்லது வேலைகளில் 6 எம்.இ.டி.க்கள் ஆற்றல் எரிக்கப்படுகிறது.

இந்தத் தரவுகளைக் கொண்டு ஆய்வு நடத்திய போது வாரம் ஒன்றிற்கு 7.5 முதல் 15 எம்.இ.டி. மணி நேரங்கள் உடற்பயிற்சி அல்லது செயல்களில் ஈடுபடுவதால் 7 விதமான கேன்சர் நோய்கள் அண்டாது என்று கண்டுபிடித்துள்ளனர்.

கேன்சர் ரிஸ்க் இன்னும் குறைய வேண்டுமென்றால் உடற்பயிற்சி நேரத்தை இன்னும் சற்றுக் கூட்டிக்கொள்ளலாம் என்கின்றனர்.

இதன் மூலம் ஆடவரில் பெருங்குடல் பகுதி கேன்சர் ரிஸ்க் குறைகிறது .

பரிந்துரைக்கப்பட்ட வாரந்திர பயிற்சி முறைகளினால் பெண்களுக்கான மார்பக புற்று நோய், கர்ப்பபை புற்றுநோய், கிட்னி புற்று நோய், லிவர் புற்றுநோய் ஆகிய ரிஸ்க்குகளும் குறைவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

7,50,000 நோயாளிகளை இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொண்டாலும் சில வகை கேன்சர்களுக்கான பங்கேற்பாளர்கள் குறைவாகவே இருந்தனர், மேலும் ஆய்வில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் வெள்ளையர்கள் என்பதும் இந்த ஆய்வின் வரம்பை நிர்ணயிக்கிறது.