700 தூய்மை பணியாளர்களை வேலையிலிருந்து தூக்கிய தமிழக அரசு! கனிமொழி கண்டனம்!!

புதன் சனவரி 13, 2021

கடந்த ஆண்டு தோன்றிய கொரோனா வைரஸ், இன்னும் உலகளவில் கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தங்கள் பணியைத் தொய்வில்லாமல் செய்து வருகின்றனர் தூய்மைப் பணியாளர்கள்.

குறிப்பாக மருத்துவர்களுக்கு அடுத்து நோய்க் கிருமிகளுடன் நேரடியாகப் போராடுவது இந்தத் தூய்மைப் பணியாளர்கள்தான். 

தரமான முகக்கவசம், கையுறைகள் போன்றவை இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா தொற்றில் கடுமையாக போராடிய முன் களப்பணியாளர்கள் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் சுமார் 700 பேர் வேலையை எடப்பாடி அரசு திடீரென பறித்துள்ளது.

அன்மையில் அடையாறு, வளசரவாக்கம் உள்ளிட்ட 7 மண்டலங்களில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள "உர்பசேர் - சுமித்" என்ற தனியார் நிறுவனத்திற்கு அரசு வழங்கியுள்ளது.

அதேப்போல், திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர் உள்ளிட்ட மண்டலங்களுக்கான தூய்மை பணியை ராம்கி என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனியாருக்கு அளிக்கப்பட்ட மண்டலங்களில் பணியாற்றி வந்த நிரந்தர தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி வசம் உள்ள 10க்கும் மேற்பட்ட மண்டலங்களில் பணி அமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி தனியாரிடம் அளிக்கப்பட்ட மண்டலங்களில் உள்ள நிரந்தர பணியாளர்கள் மாநகராட்சி வசம் உள்ள மண்டலங்களில் பணியமர்த்தப்பட்டதனால், இந்த மண்டலங்களில் பணியாற்றிய ஒப்பந்த பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர்

குறிப்பாக இவர்கள் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக தூய்மைப்பணியாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வேலை எக்காரணமும் கூறப்படாமல் பறிக்கப்பட்டுள்ளது. குப்பை அள்ளும் பணி தனியாருக்கு கொடுக்கப்பட்டதாலேயே அவர்கள் பணி பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கோவிட் போர் வீரர்கள் தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டாலும், இந்த இபிஎஸ் அரசு சென்னையில் 700 துப்புரவு தொழிலாளர்களின் வேலையை பறித்துள்ளது.

நாம் பெருந்தொற்றின்போது அவர்களை சார்ந்து இருந்தபோதும், அவர்களுக்கு உரிய நேரம் தரப்படாமல் அதுவும் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ள இந்தக் காலக்கட்டத்தில் இது மிகவும் மோசமான செயல். பொங்கலுக்கு முன்பாக நாம் அவர்களுக்கு காட்டும் நன்றி இதுதான்” எனத் தெரிவித்துள்ளார்.