8 ஆவது அகவை நாளில் ILC தமிழ்

திங்கள் மே 07, 2018

வணக்கம்!
உயிரோடைத் தமிழ் மக்கள் வானொலி, கட்டுடைந்த வெள்ளமாக பாய்ந்து கொண்டிருக்கும்.

சிங்கள அடிவருடித்தனத்துக்கு விலை போகாது, தமிழ்த் தேசியம் ஒன்றையே கருத்தாக கொண்டு பயணிக்க வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டது. 2010 ஆம் ஆண்டு அதற்கான அடித்தளம் ஒன்றை நாம் போட வேண்டிய நிலை உருவாகி பலத்த சிரமங்களுக்கு மத்தியில் எமக்கான உயிரோட்டமுள்ள தேசிய ஊடகம் ஒன்றை உருவாக்குவதற்காக முனைப்புக் கொண்டோம். அதன் வெளிப்பாடே “அனைத்துலக உயிரோடைத் தமிழ் மக்கள் வானொலி “

பணம் என்றும் பலமான துரோகங்கள் என்றும் எதிர்ப்புக்கள் என்றும் பல நூறு தடைகள் கண்முன்னே நிமிர்ந்து நின்ற போதும் அவற்றை எல்லாம் தூசாக மதித்து எமது வானொலிக்கான அடித்தளத்தை நிறைவான, நம்பிக்கை கொண்ட ஊடகவியலாளர்களைக் கொண்டு போட்டோம். அந்த ஊடகவியலாளர்களின் அயராத உழைப்பு இன்று எட்டு அகவைகளைக் கடந்தும் பயணிப்பதற்கு உறுதுணையாக இருக்கின்றது என்பது மன நிறைவானது.

ஊடக வியாபாரிகள் தமிழ்த் தேசியம் பேசுவதும் அதற்கு தமிழ்த் தேசியவாதிகளாக தம்மை கருதிக் கொள்வோர் துணை போவதுமான முள்ளிவாய்க்காலின் பின்னரான காலத்தில் உண்மையான நேர்மையான உறுதியான ஊடகப் பணி என்பது இலகுவானதல்ல.

இதற்காக நாம் பலவற்றை இழந்திருக்கிறோம். அதற்காக நாம் பல வடிவங்களில் எமது உழைப்புக்களை போட்டுள்ளோம். அர்ப்பணிப்பு மிக்க அந்த உழைப்பு எமது வானொலியை மற்ற ஊடகங்களில் இருந்து எப்போதும் வேறுபடுத்தி வைத்திருக்கும் என்பது நிட்சயம். அத்தோடு அந்த அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு என்றும் எம்மை மேன்மையுறச் செய்து ஈகிகளின் வழித் தடங்களில் எம்மை உறுதியாக பயணிக்க வைக்கும் என்றே உளமார நம்புகிறோம்.

ஆளணி, பணவலு என பல தடைகள் இன்றும் எம்முன்னே விரிந்து கிடக்கிறன. ஆனாலும் அவற்றை எல்லாம் உடைத்தெறிந்து சோரம் போகாது எமது இலக்கை அடைவதற்கு தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம் என இன்றைய 8 ஆவது அகவை நாளில் மீண்டுமொரு முறை உறுதி ஏற்போம்.

எம்மோடு பயணிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
நீங்கள் இன்றி நாம் இல்லை.

நன்றி

ILC தமிழ்