8 மாத குழந்தையை காணாமல் ஆக்கிய ஒரே நாடு சிறிலங்கா!

செவ்வாய் அக்டோபர் 01, 2019

"உலகிலேயே சிறிலங்கா அரசாங்கமே எட்டுமாதக் குழந்தைகளைக் கூட வலிந்து காணாமல் செய்த ஒரே நாடாகத் தனித்து நிற்கிறது" இவ்வாறு இன்று முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையருக்கு அனுப்பிவைப்பதற்காக கையளிக்கப்பட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சிறிலங்காவில் வலிந்து காணாமல் செய்யப்பட்ட தமிழ்க் குழந்தைகள்

மாண்புமிகு உயர் ஆணையர் அவர்களுக்கு வணக்கம்.

சிறிலங்கா அரசாங்கத்தால் வலிந்து காணாமல் செய்யப்பட்ட தமிழ்க் குழந்தைகள் இருக்குமிடம் அறிந்திட உங்கள் உதவி நாடி எழுதுகிறோம். உங்கள் வழிகாட்டலில் இந்தக் குழந்தைகள கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று நம்பிக்கைக் கொண்டுள்ளோம்.

உலகிலேயே சிறிலங்கா அரசாங்கமே எட்டுமாதக் குழந்தைகளைக் கூட வலிந்து காணாமல் செய்த ஒரே நாடாகத் தனித்து நிற்கிறது. இந்தக் குழந்தைகள் அனைவரும் தமிழினக் குழந்தைகளே.

இந்தத் தமிழ்க் குழந்தைகளில் பலரும் பத்தாண்டு முன்பு 2009 மே மாதம் போரின் முடிவில் எவ்விதக்கேடும் நேரிடாது என்ற உறுதிமொழிகளை நம்பி சிறிலங்கா பாதுகாப்புப் படைகளிடம் பெற்றோர் தம் பிள்ளைகளோடு சரணடைந்த போது வலிந்து காணாமல் செய்யப்பட்டவர்கள் ஆவர். ஆனால் சற்றொப்பப் பத்தாண்டு காலம் கழிந்த பிறகும் இந்தக் குழந்தைகளைப் பற்றியோ அவர்தம் பெற்றோர் பற்றியோ அரசினரிடமிருந்து பதிலேதும் இல்லை.சில குழந்தைகள் சிறிலங்கா பாதுகாப்புப் படைகளால் பெற்றோர் கடத்தப்பட்ட போது உடன்சென்று காணாமல் செய்யப்பட்டவர்கள் ஆவர்.

இந்தக் குழந்தைகள் இவ்வாறு சரணடைந்து கடத்தப்பட்டதற்குக் கண்கண்ட சாட்சிகள் பலர் உள்ளனர். பல்லாண்டுக் காலமாய் இந்தக் குழந்தைகளின் உற்றாரும் மற்றாரும் இந்தக் குழந்தைகளைத் தேடித் தவிக்கின்றார்கள். சிறிலங்காவில் மட்டுமின்றி, ஐநா மனிதவுரிமைப் பேரவையிலும் கூட சிறிலங்கா பாதுகாப்புப்படைகளும் இராணுவ உளவுத்துறையும் செய்யும் கேடுகள் உட்பட எத்தனையோ தடைகள் இருப்பினும் இந்தத் தேடல் தொடர்கிறது.

காணாமல் செய்யப்பட்ட எம் குழந்தைகள்பால் கவனம் ஈர்க்க வேண்டும் என்ற தவிப்பிலும் துடிப்பிலும், தொடர்ந்து அமைதியான கிளர்ச்சிகளும் உணவுமறுப்புப் போராட்டங்களும் செய்து வருகிறோம்.  குடியரசுத் தலைவருக்கும் தலைமையமைச்சருக்கும் எத்தனையோ வேண்டுகோள்கள் விடுத்தும் கூட, சிறிலங்கா அரசாங்கம் வலிந்து காணாமல் செய்யப்பட்ட இந்தத் தமிழ்க் குழந்தைகள் பற்றிய விவரங்கள் ஏதும் தர மறுத்து வருகிறது.

சிறிலங்காவின் தலைமையமைச்சர் ரணில் விக்கிரமசிங்க 2016 ஜனவரி 15ஆம் நாள் வடக்கு மாவட்டத்திலுள்ள யாழ்ப்பாணம் நகரில் ஒரு பொது நிகழ்வில் இப்படிச் சொன்னார்: “2009 மே மாதத்தில் போர்முடிவில் சிறிலங்கா பாதுகாப்புப் படைகளிடம் சரணடைந்தவரகள் இப்போது உயிருடனில்லை.” எங்கள் குழந்தைகளும் உயிருடனில்லையோ என்று கவலைப்படுகிறோம். இவர்கள் இன்றிருந்தால் ஆகச் சிறு குழந்தைக்கு இப்போது சற்றொப்பப் பதினொரு வயதாகியிருக்க வேண்டும்.

எத்தனையோ தமிழ்க் குழந்தைகள் வலிந்து காணாமல் செய்யப்பட்டிருப்பினும் வலிந்து காணாமல் செய்யப்பட்ட இருபத்தொன்பது (29) தமிழ்க் குழந்தைகள் மற்றும் சிறார்கள் பற்றிய செய்திகள் — வலிந்து காணாமல் செய்யப்பட்ட நேரத்தில் இக்குழந்தைகளின் படம் பெயர் வயது ஆகியவை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றினையும் இன்றையநாளில் வெளியிடுகின்றோம் .

எங்கள் குழந்தைகள் எங்கே என்று கண்டுபிடிக்க ஆவன செய்யுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.