80 வயதிலும் விமானப்பணிப் பெண்ணாக பேட்டே நாஷ்

வெள்ளி டிசம்பர் 16, 2016

ஓய்வறியா உழைப்பும், சுறுசுறுப்பும் இளமைக்காலத்துக்கே உரித்தான வரப்பிரசாதம் என்றால் 80 வயதிலும் விமானப்பணிப் பெண்ணாக சோர்வின்றி பணியாற்றிவரும் இவர்தான் உலகில் மிகவும் இளமையான பேரிளம்பெண் என்று கருதலாம்.

அமெரிக்காவின் அதிபராக டுவைட் எய்சென்ஹோவர் என்பவர் பதவியேற்றிருந்த காலத்தில் தனது 21-வது வயதில் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் (தற்போது அமெரிக்கன் ஏர்லைன்ஸ்) ஏர் ஹோஸ்ட்டஸ் ஆக நுழைந்தவர், பேட்டே நாஷ்.

அதே நிறுவனத்தில் இன்னும் விமானப் பெண்ணாக இன்முகத்துடன் பணியாற்றிவரும் இவர், பணிஓய்வைப்பற்றி சிந்தித்துப் பார்க்க நேரமில்லை என்கிறார்.

வாஷிங்டன் நகரில் இருந்து பாஸ்டன் நகருக்கு செல்லும் விமானத்தில் தொடர்ந்து பணியாற்றிவரும் நாஷ், தனது பணிக்காலத்தில் கென்னடி உள்ளிட்ட அமெரிக்க அதிபர்களுக்கு சேவை செய்துள்ளதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.

இந்த வழித்தடத்தில் வழக்கமாக செல்லும் பலரை தோழமையுடன் நலம் விசாரித்து, அன்புடன் உபசரிக்கும் இவருக்கு பலபேர் நண்பர்களாக உள்ளனர். தனது நண்பர்களை கட்டிப்புடி வைத்தியம் மூலம் பரவசப்படுத்தும் இவர் உடலில் சக்தி இருக்கும்வரை உழைத்து கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

எப்போது ஓய்வு? என்று யாராவது கேட்டுவிட்டால், ஏன்? வேலை செய்வது ஆனந்தமாக தானே இருக்கிறது? இங்கிலாந்து ராணிபோல் எனது பணிக்காலத்தில் வைரவிழா காணவேண்டும் என்கிறார், பேட்டே நாஷ்.