9-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி! எங்கள் போராட்டம் தொடரும் விவசாயிகள்-

வெள்ளி சனவரி 15, 2021

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசுடன் நடைபெற்ற விவசாயிகளின் 9-வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.

இதனையடுத்து வரும் ஜனவரி 19-ஆம் தேதி அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஏற்கெனவே நடைபெற்ற 8 கட்ட பேச்சுவார்த்தையில் எந்த சமரச முடிவும் எட்டப்படாத நிலையில், இன்று (ஜன. 15) 9-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

பிற்பகல் 2.30மணியளவில் தொடங்கிய இந்த பேச்சுவார்த்தையில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும், மத்திய அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தில்லி விஞ்ஞான் பவனில் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து வரும் 19-ஆம் தேதி 10-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.