ஆசை இராசையா என்னும் ஆதர்சம்

சனி செப்டம்பர் 12, 2020

 பிரசித்திபெற்ற தனது ஓவியங்களுக்கூடாக சாகாவரம் பெற்றவர் மதிப்பு  மிக்க ஓவியர்ஆசை இராசையா அவர்கள் என்று எண்ணியே என் மனம் சற்று ஆறுதலடைகிறது. அவரது ஓவியங்களுக்கூடாக அவர் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே என் மனம்  இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறது.

y

அத் துயரச் செய்தி கேட்ட தருணம் தொடக்கம் என் மனம் ஒரிடத்தில் நிலையாக இல்லை. ஓவியர் ஆசை இராசையா அவர்கள் இயற்கை எய்திவிட்டார் என்ற அந்தச் செய்தியினால் என்மனம் பாரமாகவிருந்தது.


அவரைப் பற்றிய நினைவுகள் என் மனச்சுவரில் அலைமோதிக்கொண்டிருந்தன. மெல்லக் கண்களை மூடிக்கொண்டேன்.

y

காலம் பின்னோக்கி நகர்ந்து சென்று ஒரு எல்லையைத் தொட்டு நிற்க.. மானசீகத்தோடு அவரிடம் ஓவியம் பயின்ற நாட்கள், அவருடையஓவியங்களின் முதற்பார்வையாளனாகவும், விமர்சகனாகவும் இருந்த நாட்கள், அவரோடு கூடப் பயணித்த நாட்கள்,அவரோடு சென்று வந்த நிகழ்வுகள்,அங்கு பார்த்த ஓவியங்கள் பற்றியஉரையாடல்கள், அவரோடு கூடப்பயணித்த நாட்கள், அவருடைய ஓவியப்பாணி, நிறங்கள், கோடுகள், உத்திகள் என என் மனவெளியில் பதிந்திருந்த பல விடயங்கள் மேற்கிளம்பிக் கொண்டிருந்தன.

துக்கித்த காட்சியாக அந்த இரவைக்கடக்க வேண்டியிருந்தது.இப்படித்தான் 2005 ஆம்ஆண்டு பிரெஞ்சு நட்புறவுக் கழகத்தில்யாழ்ப்பாணப் பல்கலைக் கழகநுண்கலைத்துறையினர் ஏற்பாடுசெய்திருந்த 'பதின்மூன்று யாழ்ப்பாணத்து ஓவியர்களின்ஓவியங்களின் காட்சியில்" ஆசை இராசையாவின் ஓவியங்களைத் தரிசித்த அன்றிரவும் தூக்கமின்றித்தவித்திருந்தேன்.

u

அவ்விரு ஓவியங்களும் என் மனதை  மிகவும் பாதித்திருந்தன. யாழ்ப்பாணத்து நரிக் குன்றுக்குளத்தின் நிலவுரு ஓவியமும், பின்மாலைப் பொழுதொன்றில் வயலில் வைக்கோல் ஏற்றிச் செல்லும் மாட்டு வண்டி ஓவியமும் அவற்றின் வெளிப்பாட்டு முறை, வர்ணப்பிரயோகம், ஒளிக்கையாட்சி, என்பவற்றால் என்னை மிகவும் வசீகரித்திருந்தன. அதற்குமுன்அத்தகைய ஓவியங்களை என் கண்கள் தரிசித்திருக்கவில்லை.


அவ்விரு ஓவியங்களின் மூலம் ஆசை இராசையா என் ஆதர்சத்துக்குரிய ஓவியரானார். எனக்கும்
அவருக்குமிடையில் பின்நாளில் நிகழ்விருந்த குரு சிஷ்ய உறவுக்கு அந்நிகழ்வு ஒரு முன்னறிவி;ப்பாகவும் இருந்தது.

சித்திரமும் வடிவமைப்புத்  துறையில் நான் பயின்ற காலத்திலும், பின்னர் அவருடைய வீட்டில் நடை பெற்ற ஓவிய அறிமுறை வகுப்புகளில் பயின்ற காலத்திலும் அவரின் ஓவியச்செய்முறை நுட்பங்களையும், தாடனத்தையும் அவருடையமாணவனாக நேரடியாக கண்டு வியந்ததுண்டு. பின்னர் அந்த வியப்பே அவரைப் பின்பற்றி வரையவும் காரணமாயிற்று.

தன்னுடைய ஓவிய நுட்பங்களை தனது மாணவர்களுக்கு நேரடியாகச் செய்து காட்டவேண்டும் என்ற ஆவல் அவரிடம் எப்போழுதுமே இருந்தது.

நீர்வர்ண ஓவியம்,எண்ணெய் வர்ண ஓவியம், மனித உடற் கூற்றியல் வரைதல், நிலைப்பொருட்கூட்ட வரைதல், நிலவுரு, மெய்யுரு வரைதல் எனஅனைத்தையும் செய்து காண்பிப்பார். அது ஓர் இலட்சிய பூர்வமான நிகழ்வாக வகுப்பறையில் இடம்பெறும்.  அதனால் மாணவர்களுக்கு மனதிலே வரையவேண்டும் என்ற உந்தலும்  ஆர்வமும்   ஏற்படும். அன்றைய நாட்களில் அவரைப்போலவேவரைதல் என்பது தான் எங்கள் தாகமாகவும் இருந்தது. அவரிடம்ஓவியம் பயின்ற அனைவரிடத்திலும் அவருடைய ஓவிய உத்திகளும், நிறத்தெரிவுகளும், ஓவியப்பாணியும்  ஏதோ ஒரு வகையில் செல்வாக்குச் செலுத்துவதைக் காணலாம்.

83 யூலைக் கலவரத்தின் பின்னர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்குத் திரும்பியபின்னர் வேறு எந்தத் தொழிலையும் நாடாது, முழுநேர ஓவியனாக வாழ்வதை மட்டுமே தீர்மானமாக நிறைவேற்றியிருந்தார். ஓவியமே அவரது விருப்பார்வமாகவும், ஜீவனோபாயமாகவும், சுதர்மமாகவும்இருந்தது. தன்னுடைய கனவை நோக்கியே யதார்த்தத்தை வரைந்தார்.

தனக்கென்று ஒரு வாழ்க்கை முறையை உருவாக்கினார். உணவு முறையைக் கொண்டிருந்தார். தனது ஆடைகளைத் தானே தைத்து உடுத்தினார். இறுதிவரையில் தனது தீர்மானத்தோடு எதையும் சமரசம் செய்துகொள்ளவில்லை. இந்த வாழ்வும் தியாகமுமே யாழ்ப்பாண ஓவியக் கலை வரலாற்றில்அவருக்கென்று விலக்க முடியாத ஒரு இடத்தை உருவாக்கியது.

 

ஈழத்து ஓவிய மரபில் ஆசை இராசையா அவர்கள் இயற்பண்புவாதஓவியராக அடையாளங்காணப்பட்டவர். கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் அவர்பயின்ற காலத்தில் முதலியார் அமரசேகராவின் நீர் வர்ண ஓவியங்களால் அதிகம் கவரப்பட்டதாகசொல்லுவார். எண்ணெய் வர்ணம் கொண்டு அவர் வரைந்த நிலவுருக்கள், மெய்யுருக்கள் என்பவற்றில் மேற்கத்தேய ஓவியரான 'ரெம்பராண்ட்" (சுநஅடிசயவெ) இன் ஒளி நிழல்ப் பிரயோகமும், கையாட்சியும் அதிகம் செல்வாக்குச்செலுத்தியிருப்பதைக் காணலாம்.

யாழ்ப்பாண நிலவுருக்களும்  வாழ்வியல் அம்சங்களும் இவரது ஓவியங்களின் பிரதான உள்ளடக்கமாகும். கனவுத்தனமான ஒரு நிறவுலகம் இவற்றில் விரியும், இயற்பண்புக்குமப்பால் புனைவே மேலோங்கியிருக்கும் ஒருவகைமனோரீதிய அனுபவத்தை கிளர்த்தும். தான் பிறந்த அச்சுவேலிக் கிராமத்தை விட்டுக் குடிபெயர்ந்த போதும் ஓவியங்களில் மீண்டும் மீண்டும் வல்லை வெளிவையும், பனை மரங்களையும், சதுப்புநிலங்களையும்,   நீர்ப் பரப்புக்களையும் நோக்கி அவர் தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தார்.

'அடுத்தொரு பிறப்பு எனக்கிருந்தால் அங்கும் ஓரோவியனாகவே இருக்க வேண்டும்." என்று அடிக்கடி கூறிவந்தார். இறப்பதற்கு சமீபமாகவும் தனது சுயப் பிரதிமை ஒன்றை வரைந்து முடிக்காமல்  வைத்திருந்தார். முற்றுப்பெறாதஅவருடைய அந்த ஓவியத்தைப் போலவே.. அவருடைய மரணமும் முற்றுப்பெறாத உரையாடல்களை விட்டுச் சென்றுவிட்டது.  மூத்த தலைமுறை ஓவியர்களின் வரிசையில்  கனவின் நிறங்களால் எம்மை ஆகர்சித்த கடைசிப் பிரதிநிதியும்  விடைபெற்று விட்டார்.

ஈழ ஓவிய மரபுக்குச்சாட்சியாகவிருந்த ஒரு ஓவியனின்  கனவும் கனவின் நிறங்களும் ஈமத் தாழியுள் வைக்கப்பட்டது. வல்லைவெளியில் நீங்கள் நினைவு  கூரப்படுவீர்கள். நரிக்குன்றுக்குளமும் மருத மரங்களும் உங்களை நினைவு கூரும். ஒற்றைப் பனை மரங்கள் உங்கள் நினைவுகளை மீட்கும். மீண்டும் காணமுடியாத உங்கள் சுவடுகளில்,நினைவுகளாலே பூச்சொரிகின்றோம்.

- தவ.தஜேந்திரன் -