அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது!!

திங்கள் சனவரி 04, 2021

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ‘ஹேக்’ செய்து விக்கி லீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே.

லண்டனில் உள்ள ஈகுவடார் நாட்டு தூதரகத்தில் பதுங்கியிருந்த இவரை கடந்த 2019–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு, தென்கிழக்கு லண்டனில் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து கைதான ஜூலியன் அசாஞ்சேவை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி அமெரிக்கா இங்கிலாந்திடம் கோரிக்கை விடுத்தது. உளவு குற்றச்சாட்டில் ஜூலியன் அசாஞ்சேவுக்கு அதிகபட்சமாக 175 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க அமெரிக்கா விரும்புகிறது.

ஆனால் அமெரிக்காவிடம் தன்னை ஒப்படைக்கக்கூடாது என்று கூறி லண்டன் கோர்ட்டில் அசாஞ்சே வழக்கு தொடர்ந்தார். கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் தொடங்கியது.

இந்த நிலையில் லண்டன் கோர்ட்டில் நீதிபதி வனேசா பாரிட்சர் முன்னிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நடந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது எனக் கூறி பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.

நீதிபதி தனது தீர்ப்பில் அசாஞ்சே கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அவரை அமெரிக்காவுக்கு அனுப்பினால் அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு வாய்ப்பு உள்ளதாலும் அவரை ஒப்படைக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

லண்டன் கோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.