ஆசிரியர்களின் போராட்டம் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது!

சனி மார்ச் 16, 2019

பொறுப்பற்று செயற்படும், கல்வி அதிகாரிகளின் அடிவருடித்தனங்களுக்கு, அவர்களின் எதேச்சதிகாரங்களுக்கு எதிராக ஆசிரியர்கள் தூக்கிய இப்போர்க்கொடி கல்வி அதிகாரிகளுக்கு மட்டுமல்ல அவர்களை தூண்டிவிடும் பிற்போக்கு அரசியல்வாதிகளுக்கும் ஓர் சாட்டையடியாகவே அமைந்திருக்கின்றது என மலையக ஆசிரியர் ஒன்றியத்தின் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

எதேச்சதிகாரமான செயற்பாடுகள் இன்று, அரசியல்வாதிகளின் தலையீடுகள் காரணமாக, என்றுமில்லாத வகையில், அதிகரித்துள்ள நிலையில் மலையக ஆசிரிய சமூகத்தின் இந்த ஒன்றுதிரண்ட எதிர்ப்பலையானது என்றுமில்லாதவாறு நடந்தேறியுள்ளது. 

இச்சக்தியின் வேகத்தை-ஆசிரியர்களின் தார்மீக கோபத்தை  உணர்ந்து, இப்போதாவது கல்வி அதிகாரிகளும் அவர்களை வழிநடத்தும் பின்னடைந்த இவ் அரசியல்வாதிகளும் ஆசிரிய சமூகத்திற்கு எதிரான தத்தமது எதேச்சதிகார நடவடிக்கைகளை மீளாய்வு செய்துக்கொள்ளல் வேண்டும்.

அப்படி அவர்கள் மீளாய்வு செய்யாதவிடத்து, மலையக ஆசிரியர் ஒன்றியமானது வரவிருக்கும் காலங்களில் ஆசிரிய நலன்களை அவதானத்துடன், காக்கும் பொருட்டு மேலும் காத்திரமான கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது என அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.