ஐக்கிய இராச்சியத்தில் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் வளர்தமிழ் 12 இற்கான அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு!

வெள்ளி அக்டோபர் 16, 2020

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஆண்டுதோறும் நடாத்தும் அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வில் ஐக்கிய இராச்சியத்தில் மட்டும் 6000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் நாடளாவிய வகையில் 18 தேர்வு நிலையங்களில் மிக ஆர்வத்துடன் தோற்றித் தேர்ச்சியும் அடைகின்றார்கள்.

இவ்வாண்டில் கொரோனாத் தொற்றின் தாக்கத்தினால் அனைத்துப் பிராந்தியங்களிலும்  தேர்வை நடாத்துவதில் தடங்கல் ஏற்பட்டது. இருந்தபோதும் வளர்தமிழ் 12 இற்கான தேர்வு மட்டும் கடந்த 10.10.2020 சனிக்கிழமை அன்று ஒரே மண்டபத்தில் இன்றைய சூழ்நிலைக்கும் சட்டவரைமுறைகளுக்கும் ஏற்ப ஒழுங்கமைக்கப்பட்டு மிக நேர்த்தியாக நடாத்தப்பட்டது.

வளர்தமிழ் 1 இலிருந்து வளர்தமிழ் 12 வரை ஆர்வத்துடனும் விடாமுயற்சியுடனும் தமிழ்மொழியைக் கற்றுவந்த மாணவச்செல்வங்களுக்கு அவர்கள் வேண்டியதைச் செய்துகொடுக்க வேண்டும் என்பதில் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையும் அதன் ஐக்கிய இராச்சியக்கிளையும் மிகவும் உறுதியாக இருந்தனவென்பதை இதன் மூலம் அறியலாம். எத்துணை இடர் வந்தபோதும் தமிழ்க்கல்வியை முன்னிறுத்தி இணையவழியில் கற்றுத்தந்த ஆசிரியர்களும் தமிழ் கற்றலை ஒருபோதும் நிறுத்தமாட்டோம் என உறுதியுடன் கற்றுத் தேர்வுக்குத் தோற்றிய மாணவச்செல்வங்களும் மிகவும் பாராட்டுதலுக்குரியவர்கள்.

ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது, ஐக்கிய இராச்சியத்தில் தமிழ்மொழியை மழலையர் நிலையிலிருந்து தொடர்ந்து கற்று வளர்தமிழ் 12 ஐயும் நிறைவு செய்வதென்பது மிக மிகப் பாராட்டப்படவேண்டிய விடயம். எழுத,வாசிக்க, பேசத்தெரிந்தால் மட்டும் போதும்; தமிழில் உயர்தர கேம்பிரிட்ஜ் தமிழ்மொழித்தேர்வு செய்தாற் போதும் என்று எண்ணுபவர்கள் எத்தனையோபேர் இருக்கிறார்கள். ஏனைய நாடுகளுடன் ஒப்பீட்டளவில் பார்க்கும் பொழுது இந்நாட்டில் மாணவர்கள் எதிர் நோக்கும் சவால்கள் அதிகம். மாணவர்கள் 11+ என்றும் உயர்தரத்திலுள்ள பள்ளிகள், தனியார் பள்ளிகள் இவற்றுக்கான தெரிவுகள், உயர்கல்விக்காகப் பல்கலைக்கழகங்களுக்கான தெரிவுகள், தேர்வுகள் ,தனியார் வகுப்புகள் , அவற்றுக்காகப் பெற்றோரின் அழுத்தங்கள் எனப் பல பளுக்களைச் சுமந்து கொண்டிருக்கும் அதே வேளையில் தமிழ்மொழிக்கென தமது நேரத்தை ஒதுக்கித் தொடர்ச்சியாகத் தமிழைக் கற்று வளர்தமிழ் 12 ஐ எட்டுவது என்பது இலகுவான பேசு பொருளன்று.

இம்மாணவர்கள் பல்வேறு தடைகளைத் தாண்டி வந்தவர்கள்.  இவர்கள் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பெரும் சொத்துகள். மழலையர் நிலை தொடக்கம் வளர்தமிழ் 12 வரையிலான பேரவையின் அனைத்து நூல்களையும் பயின்று வந்தவர்கள். மேலும், எதிர்காலத்தில் வாழ்க்கையில் பல வெற்றிகளைக் காணப்போகிறவர்களும் இவர்களே. தமிழ்மொழியை இறுகக் கைபிடித்து அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லக்கூடியவர்களும் இவர்கள்தான். அவர்களின் மொழிப்பற்றையும், உறுதியையும் பாராட்டாது இருக்க முடியாது.


நாளுக்கு நாள் நோய்த்தொற்று அதிகரித்து வரும் இச்சூழ்நிலையில்,  வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கவனத்திற்கொண்டு தேர்வையும் நடாத்திமுடித்தமைக்கு தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவைக்குப் பாராட்டுகள் உரித்தாகுக.

தமிழுணர்வுடன், இத்தேர்வு மிக நேர்த்தியாக நடந்தேற உறுதுணையாக இருந்த ஒழுங்கமைப்பாளர்கள், தேர்வு நடத்துநர்கள், நிர்வாகிகள், பணியாளர்கள், மனமுவந்து உதவிய அனைவருக்கும் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஐக்கிய இராச்சியக்கிளை தன் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.