ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பட்டதாரிகளைப் பிரித்து அவர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது!

சனி ஓகஸ்ட் 24, 2019

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பட்டதாரிகளைப் பிரித்து அவர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது என ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத் தலைவர் தென்னே ஞானானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிவாரிப் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்னும் சில தினங்களில் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையில்லா வெளிவாரிப் பட்டதாரிகள் இன்று (சனிக்கிழமை) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஒன்றுகூடி கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “இலங்கை வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பட்டதாரிகளுக்கு பாரிய ஒரு துரோகத்தினை செய்திருக்கின்றது.

இதுவரை காலமும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்குகின்ற போது உள்வாரி, வெளிவாரி, எச்.என்.டி.ஏ என்ற வேறுபாடு இன்றி அனைவரும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகாரம் பெற்றவர்கள் என்ற அடிப்படையில் உள்வாங்கப்பட்டு அரச நியமனங்கள் வழங்கப்பட்டன.

ஆனால் இந்த அரசாங்கம் ஒரு போலியான முறையினைக் கையாண்டு பட்டதாரிகளுக்கிடையே வேறுபாடுகளை உருவாக்கி வெளிவாரிப் பட்டதாரிகளை மீண்டும் வீதிக்கு அழைத்துள்ளனர்.

உள்வாரிப் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கிய பின்னர் 14 நாட்களில் எமக்கு நியமனம் வழங்கப்படும் என தமிழ் அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை தந்தனர். ஆனால் எதுவும் நடைபெறவில்லை.

எனவே அனைத்து பட்டதாரிகளையும் உள்வாங்கி நியமனங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் தேர்தல் காலம் என்று பாராது நாங்கள் கடுமையான போராட்டத்தை முன்னெடுப்போம்” என அவர் தெரிவித்தார்.