ஐ.நா சபையில் ஒலித்த 15 வயது தமிழ் சிறுமியின் குரல்!

ஞாயிறு அக்டோபர் 13, 2019

ஐக்கிய நாடுகள் சபையினால் உலக அமைதி தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்தில் பல நாடுகளில் இருந்து ஆர்வலர்கள்  உட்பட பல பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர். 

இக்கூட்டத்தில் ஸ்வீடனை சேர்ந்த பருவநிலை மாற்ற ஆர்வலரான 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க் ஆற்றிய உரை, உலகின் கவனத்தை ஈர்த்திருந்தது. அவரை போன்றே 15 வயதையுடைய இந்திய தமிழ் சிறுமி ஒருவரும் ஐக்கிய நாடுகள் சபையில்  உரையாற்றியிருந்தார்.

இந்த சிறப்பு கூட்டத்தில் பேசுவதற்கு உலகம் முழுவதிலுமிருந்து போட்டியின் அடிப்படையில் பத்து மாணவ தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படிருந்தனர். அதில் இந்தியாவை பூர்விகமாக கொண்டு தற்போது அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் வாழ்ந்து வரும் 15 வயது தமிழ்ச் சிறுமியான ஜனனி சிவக்குமாரும் ஒருவர்.

இதன் போது ஒரே தமிழ் மாணவியாக பங்குபற்றிய ஜனனி தமிழகத்தை சேர்ந்த கவிஞரான கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற சிறப்புமிக்க வரிகளுடன் ஐக்கிய நாடுகள் சபையில் தனது உரையை தொடங்கினார்.

மேலும் தமது உறையில் “உலகையே அச்சுறுத்தி வரும் பருவநிலை மாற்றத்தை நாம் ஒவ்வொருவரும், நம்மை 'உலகத்தின் குடிமகனாக' கருதி செயலாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார். 

இந்தியாவில் 'கேர்ல்ஸ் பிளே குளோபல்' (Girls Play Global) எனும் இலாப நோக்கமற்ற அமைப்பினை நிறுவி, பாலின பாகுபாட்டாலும், பொருளாதார சூழ்நிலையாலும் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களை சேர்ந்த அரச பாடசாலை  மாணவிகளுக்கு கால்பந்து உள்ளிட்ட பெரிதும் வாய்ப்பளிக்கப்படாத விளையாட்டுகளை கற்றுக்கொடுத்து, அதன் மூலம் அவர்களின் திறமை மற்றும் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான விளிப்புணர்வை ஏற்படுத்த செயற்பட்டுவருகின்றார் ஜனனி எ ன்பதுவும் குறிப்பிடதக்கது.